பக்கம்:அவள்.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு முத்தம் 387

அப்பா ஆபீசிலிருந்து வந்தார். அப்புறம் டாக்டர் வந்தார். எங்களை விரட்டிட்டா.

அப்பா, டாக்டரை வாசல்வரை கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தார்.

மத்யான சாதம் மிச்சம் கொஞ்சம் இருந்ததை அப்பா தான் பரிமாறினார். எங்களுக்குப் பசிச்சுது. கடையிலிருந்து ரொட்டி அண்ணா தான் வாங்கிண்டு வந்தான். இரண்டு துண்டு கூடப் பிடுங்கிண்டான். அம்மா ரூமிலிருந்தே வரல்லே. நாங்கள் அங்கே போகக் கூடாதுன்னு அப்பா உத்தரவு போட்டுட்டார். அப்பா நல்லவர் தான். ஆனால், சொன்னால் சொன்னதுதான்.

அம்மா தூங்கினான்னு நினைக்கிறேன். அப்பா வெளியிலே வந்து கூடத்துலே சாமி படங்களைப் பார்த்துண்டு நின்னுண்டிருந்தார். பின்னாலே கை கட்டிண்டு.

பக்கத்து ரூமிலே எங்களுக்குப் படுக்கை. அண்ணா சக்கையா தூங்கினான். நான் படுக்கையில் பிரண்டுண்டிருந்தேன். கால் தூக்கம், அரைத் தூக்கம் கன்னத்தில் ஒரு ரோஜாப்பூ அழுந்தினாப் போல மெத்துனு...

"அம்மா! அம்மா!” கழுத்தை இறுக்கிக் கட்டிண்டேன். தாலி தொங்கி, மூக்கு குறுகுறு—"உஷ்"— தன்னை மெதுவாய் விடுவித்துக் கொண்டாள்.

"சமத்தாயிரு."

போயிட்டா.

அதுவும் கனவு மாதிரிதான் இருந்தது. ஆனால், கனவு இல்லை.

விடிஞ்சதுமே ஊரிலேருந்து பாட்டி, தாத்தா வெயிலானப்புறம் அம்மாவின் அம்மா, அண்ணா—இவாள்லாம் எப்படி வந்தா? ஏன் வந்தா திடீர்னு...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/411&oldid=1497249" இலிருந்து மீள்விக்கப்பட்டது