365 லா. ச. ராமாமிருதம்
யார் வந்து என்ன?
ஒருவேளை நாடி விளையாட்டு விளையாடாமல் இருந்தா, அம்மா இருந்திருப்பாளோ?
ஆனால். அம்மா தந்த முத்தம்—
என்னிடம் பத்திரமாயிருக்கு.
பழங்கணக்கு ஓயாத கணக்கு. அசை போடப் போட அதிகரிக்கும் கணக்கு.
மனமில்லாமல் படுக்கையை விட்டு எழுகிறேன். ஞாயிறுக்கு மறுநாள் திங்கள் எப்பவுமே ஆபீஸ் நுகத்தடிக்குக் கழுத்தைக் கொடுக்க மனமில்லா கசக்கும் நாள்.
திடீர்ப் பொடியில் சோம்பேறிக் காபி கலக்கிறேன். பிடிக்கவில்லை. குடிக்காமலும் முடியவில்லை. வீட்டுக் காபி வீட்டுச் சோறுக்கு நினைப்பு எடுத்து அடக்க முடியாவிட்டால் இரண்டு மாதங்கள், மூணு மாதங்களுக்கு ஒருமுறை அண்ணா வீட்டுக்கு, மன்னி சமையல் மிகவும் நன்றாயிருக்கும்.
நேற்று இரவு ரயிலடிக்குப் போயிருந்தேன் மன்னி, குழந்தைகள், அண்ணாவை வழியனுப்ப. கடைசி நேரத்தில் அண்ணா பயணத்துக்குக் கொசிராய் ஒட்டிக் கொண்டான். ரயிலடியிலேயே ஒரு லீவு மனு எழுதி தன் ஆபீசில் சேர்த்துவிடும்படி என்னிடம் கொடுத்துவிட்டான். "மன்னி தீபாவளிக்குப் பிறந்தகம் போகிறாள். நானும் கூடப் போய்விட்டால் எனக்குத் தீபாவளி செலவு மிச்சம் பாரு. மாப்பிள்ளை பழசானாலும் மாமனார் சும்மா விட்டுவிடுவாரா?” என்று மன்னி ஏதிரேயே சொல்கிறான். தவிர "மச்சினிகள் குறுகுறு” என்று என்னைக் கண் அடிக்கிறான்.