372 லா. ச. ராமாமிருதம்
லேயே சுத்துவேள். பார்க்கவும் லக்ஷணம்.வெள்ளிக்கிழமை எண்ணெய் தேச்சுண்டால் ஒரு பாடு. கூந்தலைக் கட்டையால் அடிச்சுத்தான் கசக்கணும். அத்தனை அடர்த்தி, அத்தனை நீளம். அவளைப் பண்ணிண்டேள், ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுத்த புண்ணியமும் கட்டிப்பேள்.”
நல்லவேளை...வண்டி நகர ஆரம்பித்துவிட்டது. நான் வண்டியோடு கூடவே கொஞ்சதுரம் ஓடவில்லை. பின்தங்கி விட்டேன்.
இன்று, ஆபீசில் என் 'ஸீட்' சேவிங்க்ஸ் பாங்க் லெட்ஜர்கள்.
கொஞ்சநாட்களாக எனக்கு நிரந்தரமான இடமில்லை. இந்தக் கிளைக்குப் புதிதாக மாறி வந்திருக்கிறேன். எங்கெங்கே ஆள் துண்டு விழுகிறதோ அங்கே நான் முட்டுக் கொடுக்க வேண்டும்.
இன்று என் 'பாக்யம்' ரோஸலின் மார்வாவுக்குப் பக்கத்து சீட்."
"ஆஹ்ஹா! நீங்களா? ஸோ, என்னை என் ஆபத்துக்களிலிருந்து மீட்க, The hero has come!”
"உங்களுடைய ஆபத்துக்கள் என்னவோ?"
"இந்த லெட்ஜர்ஸ்தான்!' ...அந்தக் கட்டைப் புத்தகங்களை கைவீசிக் காட்டிச் சிரித்தாள்.
"இதுங்களைவிட ஆபத்துங்க வேணுமா என்ன?”
ஒ...ரோஸலின் மார்வா வேலையில் படுமோசம். ஆனால் 'படா' சாமர்த்தியசாலி. இப்படித்தான் 'ஜாலக்'காய்ப் பேசி தன் வேலையைப் பிறத்தியார் தலையில் போட்டுத் தன் காரியத்தைச் சாதித்துக்கொள்வாள் தகுடு தத்தக்காரி.