xxxxii
அவள் எல்லாவற்றிற்கும் சாக்ஷியானவள். ஆனால் தான் நிரூபணைக்கு அப்பாற்பட்டவள். ஒரே சமயத்தில், எதிர் மறைகள் தன்னில் பொதிந்தும் புதைந்தும் இருப்பவள். பட்டைவிட நளினமானவள். ஆனால் பட்டு நூல் போன்று உரமானவள்.
இந்தத் தன்மைகள் தனித்தனியாவும், ஒருங்காகவோ அழுத்தமாக விழுந்திருக்கும், அல்லது விழுந்திருப்பதாக நான் நினைத்துக்கொண்டிருக்கும் கதைகளை, இந்தத் தொகுப்பில் சேர்ந்து பார்க்கிறீர்கள்.
தெய்வம் மனுஷ்யரூபேண: என்கிற வாக்கைத்தான் இந்தக்கதைகள் உறுதிப்படுத்துகின்றன. அதுமட்டுமன்று, அவள் இயங்குகையில், அவள் கூட அறியாமல், அவளிடமிருந்தும் வெளிப்படும் ஸௌந்தர்ய சூக்ஷ்மங்களை, இந்தப் பக்கங்களின் ஒட்டுமொத்தத் தாக்கமாய் உணரவோ, அதனால் அனுபவிக்கவும் நிகிழ்ந்திடில், "நான் பெற்ற இன்பம் வையகம்......"
இலக்கியம் என்பதே என்ன? சதை உரிந்த பார்வையுடன் உள்ள நெகிழ்ச்சியும் இழைவதன் விளைவாய தரிசனம்தானே! ஆனால் அதற்கும் அவள் அருள் வேண்டும்.
ஆதிசங்கரர் ஸௌந்தர்ய லஹரியில் சொல்கிறார்: உன்னுடைய வாக்கைக் கொண்டே அல்லவா உன் ஸ்தோத்திரம் அமைந்தது.
பண்டை மொழியில், 'வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளியே பிள்ளையாருக்கு வெல்லம் நைவேத்யம்.'
***
கூடத்தில் ஒரே ரகளை. எட்டிப்பார்க்கிறேன். என் மருமகளை இப்படிப் பார்த்தில்லை, கூந்தல் அவிழ்ந்து (அவிழ்த்துவிட்டிருக்கிறாள், பின்னிக்கொள்ள. அவள் கூந்தல் அவள் செருக்கு, நியாயமாகவே) முகக் கோடுகள் கலைந்து நெரிந்து கண்கள் நெருப்பைக் கக்குகின்றன. முகம் குங்குமம்.