378 லா. ச. ராமாமிருதம்
பெருமூச்செறிந்தாள்.
'தனிமை பயங்கரம் மிஸ்டர் அம்பி.”
என்ன சொல்வது தெரியவில்லை.
"மிஸ்டர் மார்வா சிங்கப்பூர் போய் வருசம் பத்தாச்சு "
"ஏன்?’
நகைத்தாள். "சம்பாரிக்கத்தான். உங்களவங்ககூடத் தான் போவல்லியா...துபாய், குவாயிட், மஸ்கட்."
"போறாங்க. மூணு வருடங்களுக்கு ஒருமுறை தாய், தகப்பன், பெண்டாட்டி பிள்ளைங்களைப் பார்க்க வராங்க."
"இவர் வரல்லே. கடிதாசுகூடக் கிடையாது."
"நான் இப்படிக் கேக்கறேன்னு நினைக்காதீங்க மிஸஸ் மார்வா... ஆள் உயிரோடு இருக்காரா இல்லையா?”
"எல்லாம் கல்லுகுண்டாட்டம் இருக்கான். வார்த்தைகளைத் துப்பினாள்.
நான் மேலே கேட்க விரும்பவில்லை. மேலே கேட்கத் தேவையில்லை.
"அம்பீ. வீட்டுக்கு வாங்களேன். காபி சாப்பிட்டுப் போலாம். நான் காபி நல்லா செய்வேன், பிராமின்ஸ் மாதிரியே."
"சாம்பார் சேஞ்ச மாதிரியா? sorry, என் பஸ் வந்துட்து. வரேன்.”
எனக்கு பஸ் இல்லை. நான் நடைதான். ஆனால், ஏறிவிட்டேன். எனக்குப் பயமாயிருந்தது. இவள் என்னைச் சாப்பிடுவதாகத் தீர்மானித்துவிட்டாள்.