பக்கம்:அவள்.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

380 லா. ச. ராமாமிருதம்

வேதனையின் ரூபிணிதான் என் இளவரசி. கனவில் என் உதட்டில் பதிந்த முத்தம் அவள் அனுப்பிய சேதி. சேதியின் மர்மம் என் இதய நரம்பைச் சுண்டும் சோகஸுகா நாதத்தின் விண்விண்ணில் தத்தளிக்கிறேன்.

பெஞ்சின்மேல் தாழ்ந்த பூவரச இலைகளினூடே ஒரு நக்ஷ்த்ரம் என்னைச் சிந்திக்கிறது.

இரு கைகளையும் அதை நோக்கி நீட்டுகிறேன். "என் எண்ணத்தின் ப்ரதிஷ்டாவந்தி, வா! என்முன் பிரத்யக்ஷமாகு!”

இலைகள் சலசலத்தன. அந்த சலனத்தின் நகக்ஷத்ரத்துள் அவள் கலைந்தாள்.

ஒற்றைப் பக்ஷி வானில் தன் ஜோடியைத் தேடிக் கொண்டே எட்ட மறைந்தது.

ஊஹும். அந்தத் தருணம் என் தோளைத் தொட்டு விட்டுப் போய்விட்டது. இனி வராது.

மறுபடியும் வெட்டோ வெறிச்சுத்தான். அங்கு, இங்கு, எங்கும் இனி அதுதான்.

எழுந்து நடக்கிறேன். கால் வந்த வழி.

ஒரு திருப்பத்தில் நெடுஞ்சாலையின் போக்குவரத்து இரைச்சல், ரொட்டி அடுப்பு அனல்போல் முகத்தில் மோதுகிறது.

கடைகண்ணிகள், வாஹனங்கள், ஜன நடமாட்டம் இரவைப் பகலாக்கிவிட்டது.

நாளைக்குத் தீபாவளி.

ஜவுளிக் கடைகளில் இன்னும் கூட்டம் வழிகின்றது.

பக்ஷணக் கடைகளில் கூட்டம் நெரிகின்றது.

பட்டாசுக் கடைகளில்-சொல்லவே வேண்டாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/424&oldid=1497281" இலிருந்து மீள்விக்கப்பட்டது