பக்கம்:அவள்.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356 லா. ச. ராமாமிருதம்

சுற்றுமுற்றும் பார்த்தார். சுண்டல் விற்கிறமாதிரி ஒருத்தன் கூடக் காணோம். எவனும் வரமாட்டான். அவர்கள் மட்டுமே. துணைக்குக் கட்டு மரங்கள், ஓடம், அந்தண்டை சவுக்குத் தோப்பு, இந்தண்டை அலைகள்,

'இவ்வளவு தூரம் ஏன்? கதை, கவிதை எழுத வந்தையா?”

அவள் புன்னகைகூடப் புரியவில்லை. முகம் 'வெறிச்’.

"ஏம்மா, இன்னும் சற்று நேரத்தில் இருட்டிவிடுமே, இங்கே நீ தனியா இருக்கலாமா?"

அவரைப் பார்த்துக்கொண்டிருந்தாள், பார்த்துக் கொண்டேயிருந்தாள். விழிகள் நிறைந்தன. விழியோரங் களிலிருந்து இரு சொட்டுக்கள் புறப்பட்டுக் கன்னங்களில் வழிந்து மோவாயினின்று உதிர்ந்தன. பதறிப்போய் விட்டார். சங்கடமாகிவிட்டது. சற்றுப் பயமுமாகி விட்டது. மோஹினிப் பிசாசு என்கிறார்களே...

"லுக், உன் மனசைப் புண்படுத்தணுங்கற எண்னமில்லை. எப்படிப் புண்படுத்தினேன்னும் தெரியவில்லை."

அலைகளைப் பார்த்துப் பெருமூச்செறிந்தாள்.

செந்திட்டு வந்துவிட்டது. கன்யாகுமரியில்தான் சூர்யோதயமும் அஸ்தமனமும் ஒரே இடத்தில். சூரியன் கனித்த ராக்ஷஸ ஆரஞ்சிப்பழம். மேற்கே பிரம்மாண்டமான கணப்புச் சட்டி. ஆனால் இந்தக் கணப்பில் கோபமில்லை. தஹிப்பில்லை. சிவந்த பழக்கனிவு. சிவந்த சாறு மணல் திட்டுகள், மரங்கள் அலைகள் மீது பெய்தது. இன்னும் கொஞ்ச நேரம்தான் மாஜிக். இதோ கிழக்கு இருண்டுபோச்சே! அங்கு கறுப்பு மசி கொட்டிவிட்டது. கடல் விளிம்புக்கப்பால், இருள் மதில்கள், கோட்டைகள் எழும்ப ஆரம்பித்துவிட்டன.

எழுந்து நின்றாள். அவளுடைய பின்னல், சாட்டையாய்த தடித்துத் தொடைக்கும் கீழ் தொங்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/430&oldid=1497298" இலிருந்து மீள்விக்கப்பட்டது