பக்கம்:அவள்.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலைகள் ஒய்வதில்லை 387

அவரும் எழுந்துகொண்டார். மணலில் பாதம் புதைந்து நடப்பது பிரயாசையாய்த்தானிருந்தது. ஆனால் அந்த அளவுக்கு நடை நேரமும் மணலும் நீண்டன. அல்ப சந்தோஷம். ஆனால் சந்தோஷம்.

கட்டடம், வாகனங்கள், சாலை வெளிச்சங்களின் எல்லைக்குள் புகுந்ததும், ஏதோ பேச வாயெடுத்து அவள் பக்கம் திரும்பினால், அவளைக் காணோம். திகைத்து நின்றார். எப்போது மறைந்தாள்? போய் வரேன் என்று சொல்லிக்கொள்ளக் கூடயில்லை. கோபம் குறுகுறு.....

"சுண்டல், சூடான சுண்டல் வேணுமா ஸார்?"

கேலி பண்ணுகிறானா? எரிச்சலாய் வந்தது. உடனேயே துக்கமாய் வந்தது.

நடந்தார்.

ஆச்சு, இரைச்சல் பண்ணைக்கு வந்தாச்சு. அதற்கு வீடு என்று பேர். ஸ்லாட்டர் ஹவுஸ். கூடம் தெரிந்தது. ஒஹோ, இன்று வெள்ளிக்கிழமையா? கேட்கவே வேண்டாம். தமிழில் சேதிக்கப்புறம்தான் சோறு. ( 'அவசரமானால் எடுத்துப் போட்டுக்கோங்கோ, சாப்பிட்டபின் எல்லாத்தையும் நினைவா அழுத்தி மூடி வையுங்கோ.”)

இன்றைக்கு நான் எடுத்துப் போட்டுக்கொள்ளப் போவதில்லை. இந்த அலட்சியம் தாங்கும் நிலையில் இல்லை. அறையுள் போய் விளக்கைப் போடாமல் சாய்வு நாற்காலியில் சாய்ந்தார்.

என் படம் படுத்துவிட்டது. இருளில்தான் ஒளிந்து கொள்ள வேண்டும்.

இன்று நடந்ததெல்லாம் கனவா? அப்படி என்ன நடந்துவிட்டது? பேசக்கூடயில்லை. நான்தான் மனம் தாங்கவில்லை, நாலு வார்த்தை கொட்டினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/431&oldid=1497301" இலிருந்து மீள்விக்கப்பட்டது