பக்கம்:அவள்.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

388 லா. ச. ராமாமிருதம்

நடந்தது கனவாயிருக்க விரும்பவில்லை. கனவை இழக்கவும் விரும்பவில்லை.

ஏன் அப்படி ஒட்டி உலர்ந்துபோயிருந்தாள்? சாப்பிட்டாளா இல்லையா? பட்டினியா காசு கொடுத்திருந்தால் வாங்கியிருப்பாளா? தவறாக அர்த்தம் பண்ணிக்கொண்டு விட்டால்! அழகில்லை அங்கமில்லை. நெஞ்சை உறுத்துகிறாள்.

கூடத்திலிருந்து ஆரவாரம் அலைமோதியது. ஒளியும் ஒலியுடன் இவர்களும் ஆடுகிறார்களா?

ரவிக்கை முடிச்சுக்கடியில் தெரிந்த வயிறு முதுகுடன் அப்படியா தோய்ந்திருக்கும்? இப்படியெல்லாம் பார்க்க எனக்குத் தோணலாமா? தோன்றினால் அதற்குப் பால் உணர்வு என்று பெயர் சூட்டிவிடுகிறதா?

அனுதாபம், பரிவு, அபிமானம் எல்லாவற்றையும் மனோதத்துவத்தில் சில்லரையாக மாற்றி அத்தனையும் ஃப்ராயிடா? அப்புறம் என்னதான் இருக்கிறது, எதற்குத் தான் நாடி துடிக்கிறது?

இன்று என் அருமைப் பேத்தி கீர்த்தியிடம் "நோ மேன் இஸ் ஆன் ஐலண்ட்" என்று அடியெடுத்துக் கொடுக்கிறேன். ஜான் டன் என்று சொல்கிறாளா பார்க்கணும். மாட்டாள்; எனக்குத் தெரியும். 'இருக்கிற பாடமே தலை முழுகறது. இங்கே உங்கள் ஜான் டனுக்கு, வேறே இடமா? தாத்தா, அதெல்லாம் உங்கள் காலம்' என்று தலையிலடித்து உட்கார வைத்துவிடுவாள்.

இல்லை, இப்படியெல்லாம் நினைக்கிறபடியே இல்லாமல், கடற்கரையில் பிசினஸா?—சீ, நாக்கே அழுக, எது எப்படியிருந்தாலும் நீ அப்படி நினைக்கலாமா? கிழமே, சாக்கடை ஸ்நானம்னா உனக்குத் தனிப் பிரியம் போல இருக்கு. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/432&oldid=1497306" இலிருந்து மீள்விக்கப்பட்டது