பக்கம்:அவள்.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலைகள் ஒய்வதில்லை

 தாளைக்கு வருவாளா?

மனைவி, மக்கள், பேத்திவரை எடுத்தாச்சு. என் அக்னிகள் தணிஞ்சாச்சு. இன்னுமா ரொமான்ஸ்?

அக்னிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. ரொமான்ஸுக்கு வயதில்லை.

என்றைக்கும் நமக்கு நாமேதான் எதிரி. முகத்தைக் கைகளில் புதைத்துக்கொண்டார். அம்பா, காப்பாற்று.

அலைகள் நாய்கள் போல் ஒன்றுடனொன்று சண்டை பிட்டுக்கொண்டு குரைத்துக்கொண்டு நள்ளிரவு தந்த தனித்த சினத்தில், தம்மைத் தாமே திரித்துக்கொண்டு, துரத்திக்கொண்டு, அலங்கோலமாய்க் கரைக்கு வந்து விழுந்து உருண்டு புரண்டன. அவைகளின் மூர்க்கம் இப்போது தாராளமாய்க் கரையை நனைத்து ஒடமும் அவைகளின் படையெடுப்பில் இடம் நகர்ந்தது.

ஒடத்தடி காலி இல்லை என்று எட்டத்திலேயே தெரிந்ததும், அவர் நடை விரைந்தது. கால்கள் அவரை இழுத்துச் சென்றன. அவள் மலர்ந்த முகம் வரவேற்றது.

“Hello!"

அவள். முழங்கால்களைக் கட்டியபடி, அவர் நின்ற படி, ஒருவரையொருவர் பார்த்தபடி...

'உக்காருங்க, ஏன் நிக்கறீங்க?" சற்று கனத்த ஆனால் மிருதுவான குரல்.

"பரவாயில்லேங்க. உக்காருங்க. இங்கே’’—இடம் விட்டாள். "நாம் டெலிபோனிலா பேசப்போறோம்?" சிரித்தாள்.

முற்றிலும் மாறியிருந்தாள். கூந்தலில் ஊதாப் பூச்சரம் தொங்கிற்று. நெற்றியில் ஊதாப்பொட்டு. வெள்ளைப்புடவை. நேற்றைய சோகைபோய், காயித லாந்தர் போல் ஏதோ உள்ளொளியில் அவள் புறம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/433&oldid=1497308" இலிருந்து மீள்விக்கப்பட்டது