அலைகள் ஒய்வதில்லை 391
'திடீரென்று காற்று சில்.’
"கையை நீட்டி நீட்டி ஆட்டறார். என்னவோ கத்தறார். காத்துலே அடிச்சுட்டுப் போயிடிச்சு கை கொடுக்க முடியல்லே. அலை அடிச்சுட்டுப் போயிட்டுது. என்ன செய்வேன்? தலைமேலே தண்ணி மூடிட்டுது. உதவிக்குப் பக்கத்துலே யாருமில்லை. நாங்க மாத்திரம். தனியே வந்திருக்கக்கூடாது. ஆனால் நான் காரணமா? சொல்லுங்க?"
அவள் கைகள் அவர் கைகளைப் பற்றிக்கொண்டன. உள் வலியில் புருவங்கள் நெரிந்தன. திடீரென்று அழகாகி விட்டாள். நடுவகிடின் இருபக்கங்களிலும் கூந்தல் வங்கி வங்கியாய்ச் சரிந்தது.
கைகளை இழுத்துக் கொண்டாள். “மன்னிச்சுக்குங்க." கண்களைத் துடைத்துக்கொண்டாள். நெற்றி மேட்டில் சஞ்சலம் தவித்தது.
"அப்புறம் இந்தப் பேய் பிடிக்கும் பாருங்க, அது வரும்போதே தெரியும். ஒரு விதமா எனக்குள் இருட்டிப் போவும். கன்னங்கரேல்னு கறுப்பா, வாயைப் பிளந்து, என்னை விழுங்க வரும். உடனே போய் வாசலைத் தாளிட்டு உள்ளே வந்து படுத்துடுவேன். ஒண்ணுமே தோணாது. பகலோ, இரவோ, ஒரே இருட்டு. சோறு தண்ணி போவாது. முதல்லே செய்யவே முடியாது. ஒரு நாளோ, அஞ்சு நாளோ, கிழிச்ச நாராட்டம் பாயில் விழுந்து கிடப்பேன். செவியிலே அலை சத்தம். அத்தோட போற அவருடைய அலறல்—"
அவள் முகத்தில் வேர்வை கொட்டிற்று. மூச்சு இரைத்தது. அவர்களைப் பற்றி அக்கறையேயில்லாமல் அலைகள் இரைந்து கொண்டிருந்தன. கடல் வளிம்பிலிருந்து இருள் கரைநோக்கி வந்து கொண்டிருந்தது. இன்று என்ன சுருக்கா?