இந்திரா
மாலை ஆபீஸ் முடியும் நேரத்துக்கு ஸ்ரீனிவாஸன் என்னிடம் வந்தான். "நீங்கள் இன்று வீட்டுக்கு வரணும்."
"என்ன விசேஷமோ?"
'என் மனைவிக்கு ஆறுதல் சொல்லணும்; எங்கள் முதல் குழந்தை காலமாகிவிட்டதற்கு." இது நான் எதிர்பாராதது. என் ஸ்வரம் இறங்கிற்று.
"இதோ பார், சீனு, இதற்கெல்லாம் எனக்கு என்ன தகுதி பெரியவாள் சமாச்சாரம், ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண்.”
“No. you are a writer. You are gifted “நீங்கள் தான்— I want it please.”
சீனிவாஸன் இதுபோல் அடிக்கடி ஆங்கிலத்துக்கு நழுவி விடுவான். நன்றாகவும் பேசுவான். கெட்டிக்காரன் Push உள்ள வன். உத்தியோகத்தில் எனக்கு மூன்று வருடம் ஜூனியர்.
G.T.இல், தெருப் பெயர் மறந்துவிட்டது. ஏறக்குறைய நாற்பது வருடங்கள் ஆகின்றன. வளைக்குள் வளைபோல் குடித்தனங்கள் நிறைந்த ஒரு நீண்ட வீட்டினுள், கடைசி வளையுள் அழைத்துச் சென்றான். வாசற்படியண்டை உட்கார்ந்திருந்த ஒரு யுவதி என்னைப் பார்த்ததும் வெடுக்கென எழுந்தாள்.