இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அம்மா
அம்மாவின் மடி பிதுங்கிற்று. ஆனாலும் அம்மாவுக்குத் திருப்தியில்லை. அவரைப் பந்தலின் இன்னொரு பக்கம் ஏணியைப் போட்டாள்.
என்ன அம்மாப் பெண்ணே, இன்னும் பறிக்கணுமா? பறிச்சதே யதேஷ்டமா...?
அம்மா, ஏணிமேல் ஏறிக்கொண்டே, "நமக்கு மட்டும் இருந்தால் ஆயிடுத்தா? சங்கராந்தியுமதுவுமா, மத்தவாளுக்கும் கொடுக்க வேண்டாமா?”
"மத்தவாளா? அது யாருடா மத்தவாள்? அண்ணாவுக்கு-அதுதான் அப்பா, அப்பாவை அண்ணாவென்று அழைப்போம்- அண்ணாவுக்குத் திகைப்பு. ஆனால் அண்ணா இடக்காகவும் பேசுவார்.
"ஏன், எதிர்த்தாம் பக்கத்தில் உடையார் வீடு, இடையன் வீடு, வேலைக்காரி குடும்பம், பால் பொங்கித்தான்னு விசாரிக்க வரவா, இவாள்ளாம் உங்களுக்கு மனுஷாளாப் படல்லியா?
சரிதான், ஊரையே வளைச்சுப் போட்டாச்சா? நாளைக்கு எல்லார் வீட்டிலேயும்தானே பால் பொங்கறது, நீ வேறே சீர்கொடுத்து அனுப்பணுமா?"
அ.-!