இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஸ்த்ரீ
My dark Gazelle of the night!
என் இரவின் கரிய மானே!
இரவு கண்ட விரிசல் போலும், மின்னல் கிளை பிரிந்த உன் கொம்பு விலாவில் ஏறி, நான் வீழ்ந்த மூர்ச்சையினின்று மீண்டபோது, உந்தன் முன்னங் குளம்புகள் என் மார்மீது உணர்ந்தேன்.
உன் மூச்சின் நெருப்பு, குங்கிலியத்தின் குபீர் குபீரில் உன்னைச் சூழ்ந்த இருளை எரித்து, அந்த வெளிச்சத்தில் நீ விட்டு விட்டு வெளிப்பட்டு, உடன் உடன் மறைகையில்.
என் கன்னத்தில் உன் மூக்கு ஈரத்தின் உராயலில்,
உன் நக்கலில்,
மீண்டும் நான் மூர்ச்சையில் மூழ்காமல்,
—நில் நில் நினைவே, மாறி மாறி நீ விழுவதும், எழுவதும்,
இழப்பதும் என் அவமானம்.
இச்சமயம் மானாக வந்திருக்கிறாள், விடாதே விடாதே. உன் மார் மேல் குளம்புகளைச் சிக்கெனப் பிடி!—