பக்கம்:அவள்.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மோனாம்பரி 415

'மலர்ந்த பின் பூவைச் செடியில் விட்டு வைக்கலாகாது. அதற்காகச் செடியை ஒட்டவும் மொட்டை அடிக்கலாகாது .

இப்படியும் ஒரு சாஸ்திரம் பேசியாகிறது .

தேடித் தேடி...செடியின் அடர்த்தி நடுவில், என் பூவைக் காண்கையில் ஒரு தனிக் களிப்பு. இப்படி ஒவ்வொரு பூவும் ஒரு தனித் தரிசனம். அ...ஹ்...ஹா...! அகப்பட்டுக்கொண்டாயா? ஆம், அது பின்வாங்குகிறாப் போல், ஒரு கூச்சம் ஒவ்வொரு சமயத்துக்கும் உணர்கிறேன். ஒவ்வொரு பறித்தலும் ஒவ்வொரு சமயம், தனித் தனி விதி.

பூப்பறிப்பா? வேட்டையா? அவளைத் தேடலிலிருந்து, அவளுக்குக் காணிக்கையாகும் இம் மலர்களைப் பறிப்பது உள்பட, வாழ்க்கையிலே இந்த வேட்டை உறவு இல்லாத இடமே கிடையாதா?

சோக ஸுகா புஷ்ப ஹரணம்.

செந்நுரை போல் பூக்கள் குடலையில் பொங்கி உயர்கின்றன.

தேடித் தேடி...

The Hunter and the Hunted.

கைக்கு எட்டியும் எட்டா உயரத்தில் ஆசை காட்டும் ஒரு பூவைப் பறித்தே ஆக வேண்டும் என வந்துவிட்ட ரோசத்தில், குடலையைக் கிணற்றுச் சுவர்மேல் வைத்து விட்டு, அவசரமாகத் திரும்பின இசைகேடில் ஏனம் சாய்ந்து, நல்ல வேளை, கிணற்றுள் விழவில்லை. ஆனால் அத்தனை பூக்களும்—

ஒரு கணம் பிரமை பிடித்து நிற்கிறேன்.

So, இன்றைய பூஜை இப்ப்டித்தானா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/459&oldid=1497420" இலிருந்து மீள்விக்கப்பட்டது