பக்கம்:அவள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2 லா. ச. ராமாமிருதம்

"உங்கள் வாக்குப்படியேதான் இருக்கட்டுமே வருஷத்துக்கொரு நாள். எல்லாரும் சந்தோஷமாயிருக்கணும்னே ஒரு நாள். ஊரே கல்யாண வீடு. நம்மிடம் இருக்கறதைப் பங்கிட்டுப்போமே!"

அதுதான் அம்மா.

***

இது எங்கள் சொந்த ஊர் இல்லை. சென்னையில் அண்ணா, உடம்பு சீர்குலைந்து போய், ஆரோக்யத்தைத் தேடி, குடும்பத்தோடு வயிறு பிழைக்க வந்த ஊர். அப்பா பள்ளிக்கூட (ஆறாம் வகுப்பு வரைதான்) ஹெட்மாஸ்டர். கூடவே போஸ்ட் மாஸ்டர். அவர் பெயரே தபாலாபீஸ் வாத்தியார்.

எதிர்வீட்டு முதலியார்தான் இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர். மூட்டையும் முடிச்சுமா, குழந்தையும் குட்டியுமா, இரவு முதன்முதலாக அண்ணாவும் அம்மாவும் வண்டியிலிருந்து இறங்கியபோது, முதலியாரும் அவர் மனைவியும் எங்களை வரவேற்க வாசலில் காத்திருந்தனர்.

முதலியாரும் அவர் மனைவியும், கோவில் உற்சவத்தில் முன்னால் போமே, ஆள் உள்ளே புகுந்துகொண்டு போமே பூதப் பொம்மைகள்! அதுமாதிரி.

"என்ன முதலியார், நான் திருப்பித் திருப்பிக் கேட்டு எழுதியும், வாடகையைப் பற்றியே ஒண்னும் தெரிவிக்கவில்லை?”

முதலியார் மார்மேல் கட்டிய கைகளுடன், "இங்கெல்லாம் அப்படியொண்ணும் கண்டிப்பு கிடையாதுங்க. மாலை வேளையில் வீட்டுக்கு விளக்கேத்தி வைக்க மஹாலச்சுமி வந்தால் போதுங்க. அம்மாவைப் பார்த்தாலும் அப்பிடித்தான் இருக்காங்க."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/46&oldid=1496166" இலிருந்து மீள்விக்கப்பட்டது