410 லா, ச. ராமாமிருதம்
கிணற்றுள்ளிருந்து நீர் மட்டத்தில் மிதந்தபடி குலுங்கிக் குலுங்கிப் பூக்களின் மோனச் சிரிப்பு என்னுள் எதிரொலிக்கின்றது,
✽✽✽
மோனத்தில் ஒன்று கண்டு பிடித்தேன்.
என் குரல் தாண்டி, இன்னொரு குரல் கேட்கிறது. அதுவும் என் குரல்தான். ஆனால், இது குகையினின்று கேட்கிறது.
இதயக் குகையின் இருளில் என்னுடைய திரவியங்கள், என்னிடமிருந்தே, மோனத்தின் பத்திரத்தில், மோனக் குரலின் பாராவில் காக்கப்படுகின்றன.
என் வாழ்நாள் முழுதும் சிறுகச் சிறுக, படிப்படியாக என் மூலம் சேர்ந்திருக்கும் என் பிறவியின் பெருமை;
என் ஆன்மாவின் பொன்வண்டு; என் உயிர் நிலையின் புழுக்கள்; என் நட்சத்திரத்தின் மின் மினி.
நான் குரலாகக் கேட்பது என் ஆன்மாவின் பொன் வண்டின் ரீங்காரமோ?
என் சேமிப்பு ஆயினும், இவை என் சொத்து அல்ல. அத்தனையும் மோனாம்பரம்.
Oh thou silence, my mistress eternal, eventual, ultimate
Outside thy closed corridor I stand,
Waiting to lay at thy threshold
The dark flower of my life
In all its being and bloom
Which is all I have got
In this my life.
✽✽✽