418 லா. ச. ராமாமிருதம்
குத்து விளக்கடியில் கிடந்த தீப்பெட்டியை எடுத்துக் குச்சியைக் கிழித்து விளக்கேற்றினாள். சுடர் திரியில் குதித்ததும் நிழல்கள் விதவிதமாக நர்த்தனம் புரிந்தன.
நானும் ஸ்விட்சைப் போட்டேன். ஆனால் current off. கூடம் கர்ப்பக் கிரஹமாக...
என்னைத் தோளைத் தொட்டுத் தன் பக்கம் திருப்பினாள் வாதாம் பருப்பைப் போன்ற மேட்டு விழிகள் என்னைத் துருவின. உக்ரமான முக வார்ப்படம்தான்.
என் காலில் விழுந்து, நெற்றி தரையில் இடிக்க, நமஸ்கரித்து, எழுந்து போய், வெளியே மறைந்தாள்.
"க்ர்ர்—றீ—ச்!”
புல்லரிப்பில், என் பலம் அனைத்தும் அவள் தன் நமஸ்காரத்தோடு வாங்கிக்கொண்டு போய்விட்டாற் போல், சாறு பிழிந்த சக்கையாக, நாற்காலியில் சாய்ந்தேன்.
விளக்கும் வந்தது. போன அம்பரத்தினின்று பிதுங்கிய ஒரு தருணம்.
தருணத்தின் தருணி.
மோன தர்சினி.
இன்பமாயிருக்கிறது.
பயமாயிருக்கிறது.
சிந்தா நதி தீரே மோன விஹாரே......