லூ சி
இத்தனை நாள் கழித்து இந்தக் கடிதம் வருவது கண்டு உனக்கு ஆச்சரியமாயிருக்கலாம். கொஞ்ச காலமாகவே விஷயங்களின் அநிச்சயம் எனக்கு உறைக்க ஆரம்பித்து விட்டது: அதில் இத்தனை வருடங்கள் நம்மிடையே மெளனத்தையும் சேர்த்துத்தான். மன்னிப்பில் எனக்கு நம்பிக்கையில்லை. மன்னித்ததால், இழைத்த தவறு சரியாகிவிடுமா? தவிர மன்னிக்க நான் யார்? அவரவர் கர்மா அவருடையது.
ஆனால், என் அந்திம காலத்தில் யாருடனும் சமாதானமாய்ப் போய்விட விரும்புகிறேன். என் கடைமூச்சுக்களில் எந்த முள்ளும் நிரட வேண்டாம். என் கனம் லேசாக இருக்க வேண்டும்.
ஆகவே சில நாட்கள் இங்கு, எங்களுடன் கழிக்க உனக்கு விருப்பமானால் வா. அவளையும் அழைத்துக் கொண்டுதான்.
பி.கு. என்னை ரேழியில் கிடத்தியிருக்கிறது என்று இல்லை. வளைய வந்து கொண்டிருக்கிறேன்.”
'கோமு, மதுவை வரச்சொல்லி எழுதிவிட்டேன்."
துளசி மாடத்தில் செடிக்குப் பூச்சூட்டிக் கொண்டிருந்த கை ஒருகணம் நின்று, மீண்டும் சிசுருஷையைத் தொடர்ந்தது.