420 லா. ச. ராமாமிருதம்
'ரதி, மதுவை அவன் ஆம்படையாளுடன் வரச் சொல்லி எழுதிவிட்டேன்.”
முறத்தரிசியில் ஒன்று, அரை கல், மண்ணைத் தேடிக் கொண்டிருந்தவள், முகம் நிமிர்ந்தாள். அவள் பார்வை அவர்மேல் கனிந்தது.
அவர்கள் வருமுன் பூஜையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று உட்கார்ந்தும், தீப உபசார சமயம், தெரு முனையில் 'ஹார்ன்' சத்தம் கேட்டது. அடுத்த நிமிடம் கார், வாசலில் பெரிய செம்மண் கோலத்தைத் தொட்டுக்கொண்டு நின்றது. சற்று நேரத்துக்கெல்லாம் பூஜையறை வாசலில் நிழல் தட்டிற்று.
"நமஸ்காரம் பண்றோம் அப்பா."
சுவரோரம் சார்த்தியிருந்த தம்பூரா மேல் பல்லி ஒன்று சுவரிலிருந்து குதித்து "ரொய்ஞ்ஞ்" நெஞ்சோடு மோதலில் இதயம் குலுங்கிற்று. பயத்தில் இடதுகையால் மார்பை அழுத்திக் கொண்டார். வலதுகையில், உத்தரணியில் அபிஷேக தீர்த்தம் நடுங்கிற்று.
இடது உள்ளங்கையில் வலதைத் தாங்கிக் குழித்து, மது காட்டிய ஜாடை ப்ரகாரம் செய்யமுயன்று, தோற்று, தீர்த்தத்தை ஏந்தி, சத்தமாக உறிஞ்சிக் குடித்து, முகம் நிமிர்ந்து, அவர் முகத்துள் சிரித்தாள். மஞ்சள் வெள்ளையில் வரிசையான பற்கள்.
“Hello Father!”
தபேலா மேல், பட்டைப் போட்டு வாசித்தாற். போன்று, குரலில் லேசான ‘பூம்!"
..அவர் கண்கள் அவர்களுக்குப் பின்னால் அல்ல அண்டையில் ஆவலுடன் தேடின. மதுவுக்கு அந்த ஜாடை தெரிந்துவிட்டது.