பக்கம்:அவள்.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

422 லா. ச. ராமாமிருதம்

குழந்தைகளுக்கு அவளை அலுக்கவேயில்லை. அவள் மேல் ஏறுவதும், கழுத்தைக் கட்டிக்கொண்டு தொங்குவதும், தடவித் தடவிப் பார்ப்பதும், முகத்தின்மேல் விரல் நுனியால் விளம்புவதும்—அந்தப் பறங்கிச் சிவப்பு அவர்களுக்குப் புரியவில்லை. பிரமிப்பு—இல்லை, திகைப்பாயிருந்தது. முரளி திடீரென அவள் தோளைக் கடித்தே விட்டான். பார்த்துவிட்ட ரதி ஓடிவந்து, முரளியை அவன் கடியிலிருந்து பிடுங்கி, முகத்தில் மாறி மாறி அறைந்தாள்.

"குழந்தையை ஒன்றும் செய்யாதீர்கள். Can you find some dettol or tincture benzoine for me?”

தோளில் பற்கள் பதிந்து ரத்தம் கசிந்தது.

மருந்தைத் தேடி ஓரகத்திகள் இருவரும் ஒன்றாய்ச் சென்றனர். வந்தவள், ரதியின் தோள்மீது ஸ்வாதீனமாய்க் கையைப் போட்டுக்கொண்டாள்.

"அப்பா, உங்களுக்கு உடம்புக்கு என்ன?”

"ஊங்-? ஓ—ஒன்றும் இல்லையே, அப்படி ஏதேனும் தெரியறதா என்ன?" தன்னை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டார்.

"இதென்ன கேள்வி அப்பா? என்னைப் பழி வாங்க வேண்டாம்.”

"மது நீ எப்படி இருக்கே? உன் கலியாணம் சந்தோஷமாயிருக்கறதா?”

மது சற்று நேரம் அவரை உற்று நோக்கிவிட்டுப் புன்னகை புரிந்தான்.

"அப்பா, நீங்கள் ஒரு சமயம் என்னிடம் என்னைப் பற்றிச் சொல்லி இருக்கிறீர்கள். உனக்கு உன் சந்தோஷம் ஒன்றுதான் குறி. யார் எப்படியானும் போகட்டும். கோபத்தில் சொன்ன வார்த்தைதான். ஆனால், அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/466&oldid=1497445" இலிருந்து மீள்விக்கப்பட்டது