பக்கம்:அவள்.pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

430 லா, ச. ராமாமிருதம்

இங்கிருந்து ஜன்னல் வழி பூஜை அறையில் குத்துவிளக்கின் சுடர் தெரிகிறது. இடுப்பளவு உயரத்துக்கு விளக்கு. வயது நூறுக்கு மேல் இருக்கும். வழிவழியாய் நின்று கொண்டிருக்கிறது,

"மஞ்சளைக் கோர்த்து."

"மாங்கல்யமே இருக்கு."

"உத்தமமாப் பேச்சு. ஆம், ஏது அதிகப்படி?”

"அம்மா கண் மூடுமுன் என்னிடம் கொடுத்தாள். கொடுப்பனையிருந்தது, மாப்பிள்ளையின் சஷ்டியப்த பூர்த்தி கலியாணம் பார்க்க. இதை சதாபிஷேகத்துக்கு வெச்சுக்கோ. ஆகி வந்தது'ன்னு"

"ஓ அப்படியா?”

பாவம், கோமதி!

அறையின் ஜன்னலோரமாய் அவருடைய கட்டில். இந்த வேளைக்கு நிலா, ஜன்னலைத் தாண்டிவிட்டது. நிலா நிழலுக்கும் இரவின் வெளிச்சத்துக்கும் குழப்பமாய், ஒரு மங்கல் சூழ்ந்திருந்தது.

தூக்கம் வரவில்லை. பஞ்சுமிட்டாய் போல் நினைவு லேசாய் மிதந்தது. கற்கண்டுக் கூர் நெஞ்சில் சுரண்டினாற் போல், ஒரு இனிப்புக் கசிந்தது.

பூஜையறையில் தாலிக்கட்டு நடந்தபோது, சிரிப்பே வந்துவிட்டது. அடக்கிக் கொள்ளக் கொஞ்சம் சிரமப் படுத்திவிட்டது. ஹோமம், ப்ரதஷ்ணம், அக்னிசாக்ஷி, தாரை வார்த்தல், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல்—இத்யாதி சடங்குகள், சிரத்தைகள் எல்லாம், இவர்களின் காதல் எனும் புயலில் பஞ்சாய்ப் பறந்து போச்சே! எல்லாம் கேலிக்கூத்து, சொப்பு வெச்சு விளையாடற மாதிரி. முகூர்த்தமாவது, மண்ணாங்கட்டியாவது, என்னேரமும் நன்னேரம்தான். அடிப்படையில் எல்லாமே பயத்தின் ஆட்சி. ஒம்பாச்சி, பூச்சாண்டி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/474&oldid=1497684" இலிருந்து மீள்விக்கப்பட்டது