432 லா. ச. ராமாமிருதம்
புன்னகைத்தார். "ஆசீர்வாதம், நமஸ்காரம், அக்ஷதை ஸகிதம், எல்லா சாங்கோபாங்கமாய் அப்பவே ஆச்சே! இப்போ இது என்ன, நாளைவரை தாங்காதா?”
"அப்படியில்லை Father. நினைத்தேன் வந்து விட்டேன்.
"குழந்தாய், நான் ஆசீர்வாதம் மறுக்கவில்லை. ஆனால் தம்பதி சேர்ந்து வந்து நமஸ்கரித்து, ஆசீர்வாதம் பெறுவதுதான் எங்களில் வழக்கம்."
"I know. இப்போது நான் எனக்காகவே வந்திருக்கிறேன், Father. மது உங்கள்மேல் வைத்திருக்கும் அன்பு அபாரமானது. அதில் நான் பங்கு கேட்கவில்லை. அந்த உறவே வேறு. பங்கு கேட்கமாட்டேன். என் பங்கிற்கு உங்கள் ஆசியைக் கேட்கிறேன். பங்கு என்பது சரியில்லை. எனக்கு உங்கள் ஆசி வேண்டும். Bless me. மண்டியிடு கிறேன். Bless me Father.”
அவள் தலைமீது கையை வைத்ததும் உள்ளங்கை வழி உஷ்ணமும் விறுவிறுப்பும் உடல் பூரா பரவுவதை உணர்ந்தார். சுகமான, இதமான உஷ்ணம், மண்டை வரை... தான் உருகுவதுபோல... உடனேயே கண்கள் இருண்டன. இருளின் ஆலிங்கனம் அவரைத் தன்னுள் இழுக்க ஆரம்பித்துவிட்டது.