434 லா. ச. ராமாமிருதம்
இன்று என்ன?
அது புரிந்துவிட்டால், பிறகு 'இன்று' ஏது?
இன்று மார்கழி பத்து.
தான் எழுந்ததே தாதன் ஊதிப் போன பின்தான்.
வென்னிரில்தான் குளித்தாலும் குளிர் வெடவெட—
இன்று தெரு நிறைந்த கோலம். அதன் நடுவே பதித்த பூசனிப்பூ மனம் நிறைந்த மஞ்சள்.
இந்தத் தடவை வாங்கியிருக்கும் பசுமஞ்சள் எப்படிப் பற்றுகிறது! அதுவும் இன்று—ஜலம் துளித்த தன் தோள்களையும் காலின் கண்டச்சதையையும் பார்த்துக்கொண்டாள். பொன் போல் தகதகத்தன.
தாலிச்சரடு மஞ்சள் பட்டதும் தங்கச்சரடு!
அடுப்பில் ஏற்றிய வெண்கலப்பானை, தங்கப்பானை போல பளபள—இன்று என்ன, நான் தொட்டதெல்லாம் பொன்னா? அதுதான் 'இன்றா?'
"வாசனை என்ன கூரையைத் துரக்கறது? நெய் மணமா, கை மணமா?" என்று கேட்டுக்கொண்டே மாமனார் வருகிறார். நடை அவரைக் குடிபோல் தள்ளுகிறது. அதுவும் இப்போ அதிகம்.
"சரி சரி, பல்லை'விளக்கியாகல்லே. அதுக்குள்ளேயும் மோப்பம் பிடிச்சாறதா?" என்று கேட்டுக்கொண்டே பின்னாலேயே அத்தை வருகிறார்.
"நான் பல்லை விளக்கியாகல்லே. நீ வாயைக் குழப்பியாகல்லே' என்று மொன மொணத்தபடி கிழவர் கிணற்றடிக்குப் போகிறார். மாமாவுக்கு இருக்கே 'பேச்சிலே இந்த இடக்கு!' டேயப்பா அத்தைக்குப் பல்லெல்லாம் திடீரென்று அடுத்தடுத்து விழுந்து போனதை இப்படித் தான் சொல்லிக் காட்டனுமாக்கும்!