4 லா, ச. ராமாமிருதம்
அவள் புத்திசாலி என்றதால் மட்டுமே அல்ல.
அவளால் சும்மாயிருக்க முடியாது.
அவள் சுபாவமே அப்படி.
அம்மா.
***
தினம் சாயங்காலம் அம்மா காய்கறித் தோட்டத்தைச் சுற்றி வருவாள், வலது கை சுட்டுவிரலும் நடுவிரலும் மேலுதட்டைப் பொத்தியபடி. அது அவளுடைய மானரிஸம்.
வெண்டைச் செடி எதிரே நிற்பாள். அங்கு ஏதோ பேச்சு நடக்கும் என்றே என் கருத்து. பாஷை நமக்குப் புரியாதது. மாலைக் காற்றின் ஜாலமோ அதன் சொந்தமான அசைவோ, செடி எட்டி அம்மாவை தொட முயல்வதுபோல எனக்குத் தோன்றும். அம்மா நகர்வாள். செடி படபடவெனத் தலையை ஆட்டும்.
அம்மா காதண்டை இடித்துக் 'கிசுகிசு'த்துத் தவிக்கும் அவரைக்கொடியை அம்மா மெல்லத் தூக்கி பந்தலில் தொற்ற விடுவாள்.
ஓ, அம்மாவுக்கும் அவள் செடிகளுக்குமிடையே நிச்சயமாகப் பேச்சு இருந்தது; சந்தேகமேயில்லை. ஆனால் பாஷை தான் நமக்குப் புரியாதது.
***
முதல் காய்ப்பைப் பறித்ததும் அம்மா, என்னிடம் சொல்லி அனுப்பி முதலியார் தம்பதிகள் வந்தனர்.
வந்ததும், "முதலியார், இந்தாங்கோ இது உங்களுடையது உங்கள் வீட்டு மண்"
சிவபாக்கியம் முன்றானையை ஏந்தி அதில் வாங்கிக் கொண்டாள்.