பக்கம்:அவள்.pdf/483

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்று நேற்று நாளை 439

ஏன் இப்படி பரப்ரம்மமாய் இருக்கார், சாப்பாட்டிலேயே நினைவில்லாமல்! நான் எவ்வளவு நன்றாய்ப் பண்ணினால் என்ன? எதைப் போட்டாலும் சாப்பிடும் மனுஷனுக்கு!

"மோர்!—மோர்!!”

"இதென்ன ரயில்வே ஸ்டேஷனா? இருங்கோ, ஒரு நிமிஷம்!'"

கிணற்றடியில் துணி துவைத்துக் கொண்டிருக்கிறாள். உச்சி வெய்யிலில்—வாழைக் கொல்லையின் பசுமை, வானத்தின் நீலம், கிணற்றடி சிமிட்டிமேல் ஜலத்தின் பளபளப்பு தனியாய்ப் பிதுங்குகின்றன.

வெய்யிலின் வெள்ளித் தகடு கண் கூசுகிறது.

இவனேதான் காலையில் பொன்னாயிருந்தான்.

உள்ளே. அத்தைக்கு மாமா புராணம் படித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார். அவர் குரல் கணிரென்று தாடி தாண்டி இங்கு வந்து எட்டுகிறது.

கிணற்றுப் பக்கமாய் வில்லாய் வளைந்து முதுகு நிமிர்ந்த தென்னை மரத்தினின்று காத்தான் உஷாராய் இறங்குகிறான். ஒருகையில் ஒரே கொத்தில் மூன்று இள நீர்கள் தொங்குகின்றன.

உள்ளே மாமா:

"திக் விஜய பராக்ரமத்தில் கைலையங்கிரிவரை
போய்விட்ட தேவிக்கெதிரே பகவானானவர்
அந்தரத்தில் வ்ருஷபாருடனாய்த் தோன்றியவுடனே
பிராட்டியின் மூன்றாவது ஸ்தனம் மறைந்தது.
தேவி வெட்கம் அடைந்தவளாய்த் தலை குனிந்தாள்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/483&oldid=1497695" இலிருந்து மீள்விக்கப்பட்டது