பக்கம்:அவள்.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

440 லா. ச. ராமாமிருதம்

கல்மேல் குனிந்து துணியைக் குமுக்கிக் கொண்டிருந்தவள் இவ்வசனம் கேட்ட அத்தருணமே நிமிர்கையில், தற்செயலாய் தன் கண்ணோக்கு தன் கழுத்துக்குக் கீழ் விழுகையில் ரவிக்கையின் கழுத்து விளிம்பில் விம்மி வழிந்து முலைகளின் வாய்க்காலில் பட்டதும் ஒரு பெரும் விதிர் விதிர்ப்பு உடலை ஊடுருவிற்று. கல்மேல் இரு கைகளை ஊன்றிக் கொண்டிராவிடின் விழுந்திருப்பாள். குப்பென உடல் பூரா வேர்வை விட்டது. குனிந்த தலை நிமிரவில்லை. தீடீரெனச் சூழ்ந்துகொண்ட கும்மிருட்டில் மின்னல் கிளை பிரிந்து மறைந்தது. மண்டையுள் ஆவி பறந்தது.

"க—கூ! க—க்—கூ! —கூகூ!!!"

எங்கோ மரப்பொந்திலிருந்து ஏதோ ஒரு பறவை.

அவளைக் கேலி செய்ததா?

அல்ல; உலகத்தின் உற்பவசோகத்திற்குத் தன் குரலைக் கொடுத்ததா?

மாலை வருகிறது.

ஆசையுடன் வாசல் வழி எதிர்பார்த்திருந்த விருந்தாளி ஒசைப்படாமல் கொல்லை வழியோ, பக்க வழியோ வந்து கூடத்தில் அமர்ந்து விட்டாற்போல், வந்தது தெரியாமல் வருகிறது. கரைத்துக் கழித்துக் கொட்டிய ஆரத்தி போன்று மாலை ஒளியின் செம்பிழம்பு தோட்டத்திலும் ஓட்டிலும் சுவர்களிலும் வழிகின்றது.

மஞ்சளையும் சுண்ணாம்பையும் கலந்து கரைத்த மங்கல ஆரத்தி.
காலையின் மஞ்சள் வெய்யிலும்
உச்சியின் வெள்ளை வெய்யிலும்
கலந்த விளைவுதான் மாலையின் மங்கல ஆரத்தி
வெய்யிலா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/484&oldid=1497696" இலிருந்து மீள்விக்கப்பட்டது