பக்கம்:அவள்.pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

442 லா. ச. ராமாமிருதம்

கிழவர், கட்டையைத் திண்ணையில் நீட்டிவிட்டார்.

குறட்டை கிளம்பிவிட்டது.

ஒரு கையில் விடிவிளக்கு, மறு கையில் சொம்புடன் மாடிக்குக் கிளம்பினாள் ஜகதா.

கூடத்தில் சூழ்ந்த கும்மிருட்டில் ஊஞ்சல் சங்கிலி கிறீச்சிட்டது.

கை விளக்கின் துணை வெளிச்சத்தில் ஊஞ்சலில் அத்தை உரு. கடல் நடுவே பாறைபோல் தெரிகின்றது. இத்தனைக்கும் நான் கடலைக் கண்டதில்லை; பாறை பார்த்ததில்லை. ஆனால் கண்டால்தான் உண்டோ? தோன்றினாலே கண்கூடும் தாண்டிக் கண்டதுதானே!

பாறையெதிரே சென்று மெளனமாய் நிற்கின்றாள்.

பாறையில் செதுக்கி அங்கிருந்து வீசும் பார்வையில் இவர் அத்தையுமில்லை, நான் மருமகளுமில்லை; கற்பங் கற்பமாய் ஆணுடன் பெண் கூடி மனித குலத்தை ஈன்றெடுக்கும் மாதர்குல சக்தியின் பாறையிது. இந்தப் பாறையினின்று, என் பங்கை வாங்கிக் கொள்ளும் பாறையின் சக்தி நான்.

விளக்கையும் பாலையும் அத்தையின் கையிலே கொடுத்து நமஸ்கரித்து, எழுந்து மறுபடியும் வாங்கிக் கொண்டு மாடி வழி திரும்புகிறாள்.

இன்றைய மாடிக்கு இத்தனை படிகளா என்ன?

எத்தனை இருந்தாலும் என்ன, எங்கிருந்தாலும் இன்று நான் சிகரத்திலிருக்கிறேன்.

இன்று, நான் என் விசுவரூபத்திலிருக்கிறேன்.

இன்று நான் என் திக்விஜயத்திலிருக்கிறேன்.

இன்று எனக்குத் தெரியும். அவர் இன்னும் தூங்க வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/486&oldid=1497701" இலிருந்து மீள்விக்கப்பட்டது