அவன்
நேற்று—
இரவு, மோருக்கு சாதம் கொண்டு வந்தவள், திடீரென சிப்பல்தட்டைக் கீழே வைத்துவிட்டு கொல்லைப்புறம் ஓடின 'திடுதிடு’ கேட்டு அம்மாவும் பின்னாலேயே போனாள். இலையில் கை காயும் இம்சை முதன் முதலாய் நேற்றுத்தான் தெரிந்தது. கிணற்றடியில் மறுக்கி மறுக்கி அவள் கமறுகையில், இங்கு எனக்கு அடிவயிற்றில் பந்து பந்தாய் சுருட்டுகிறது. இலையில் ஆறிப்போன சாதம் வேல்வேலாய் சிலிர்த்துக்கொண்டது. இது என்ன பயம்?
"மருமகள் ராஜாத்தி, மாமியார் தோழிப் பெண்'—என இவள் முன்வர, அம்மா அவள் தோளைப் பிடித்து நடத்திவர, இருவரும் ஒழுங்கையறைக்குச் சென்று, சற்று நேரம் கழித்து அம்மா மாத்திரம் திரும்பி வருகிறாள். என் கண்ணில் எழுந்த வினா அம்மா உதடுகளில் கொக்கியாய் மாட்டிக்கொண்டு புன்னகையில் இழுக்கிறது.
"எல்லாம் நல்லதுதான்: நேர வேண்டியதுதான் கிரமப்படி நேர்ந்திருக்கு. மோருக்கு சாதம் வேறே போடட்டுமா ?”
கையை உதறிக்கொண்டு எழுகிறேன். வேண்டியில்லை.
மாடியறைதான் என் வளை; என் கூடு; என் அரண். எத்தனை வெளிச்சமானாலும் அங்கு மாத்திரம் தொங்கும் இருள்தான் என் தஞ்சம்.
கட்டிலில் விழுகிறேன்.