பக்கம்:அவள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்மா 5

 முதலியார் இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டு, "மண்ணை வெச்சிட்டு என்ன செய்யறதுங்க? அதைப் பொன்னாக்கும் கை யாருடையது? அம்மா வந்த அன்னிக்கே சொன்னேனே, வீட்டுக்கு மஹாலச்சுமி வந்தாச்சுன்னு.”

முதலியார் பிரமாதமாய்ப் பேசுவார். ஆனால் அவர் கண்கள் இப்போது துளும்பின. கூடவே புன்னகையில் கன்னங்கள் நெகிழ்ந்தன. முதலியாரும் அவர் மனைவியும் பக்கத்தில் பக்கத்தில் ஜோடி யானைக்குட்டிகள்.

***

நாங்கள் இருபது வருடங்கள் இந்தக் கிராமத்தில் வாழ்ந்தோம். எங்கள் குழந்தைப் பருவம், பிள்ளைப் பருவம் இங்குதான் கழிந்தன. பிறகு மேலே படிக்கச் சென்னைக்கு நாங்கள் பையன்கள் சிற்றப்பா வீட்டுக்குச் சென்றாலும், மைக்கல்மஸ், கிறிஸ்துமஸ், கோடையென அவ்வப்போது விடுமுறைக்கு என்று திரும்பிவிடுவோம். அப்போது இங்கிருக்கும் நேரமெல்லாம், விடுமுறை கழிந்ததும் சென்னைக்குத் திரும்பணுமே என்ற கசப்பு. சென்னையில் இருக்கும்போது, மறு விடுமுறைக்குக் காத்திருக்கும் நாட்கள்.

அப்படியொரு காலம். எங்கள் வாழ்க்கையிலேயே சந்தோஷமான சத்தான நாட்கள் இந்த வீட்டில்தான். எளிமையான வாழ்க்கையில் களங்கமற்ற சந்தோஷங்கள்.

***

தினப்படி எனக்கொரு வியப்பு. அம்மா எப்போ குளித்தாள்? ஏனெனில், நாங்கள் என்ன சுருக்க எழுந்திருந்தாலும் அதற்கு முன்னேயே அம்மா குளித்திருந்தாள். விடிகாலையில் எழுந்துவிடுவாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/49&oldid=1496181" இலிருந்து மீள்விக்கப்பட்டது