இன்று நேற்று நாளை 447
"எல்லாம் நேர வேண்டியதுதான் நேர்ந்திருக்கு?"—என்று தன் இனத்தின் வெற்றியை அம்மா இப்படி என் முகத்திலேயே வீசுவாளா? இப்படிச் சொல்லிவிட்டு உடனே உதட்டைப் பிதுக்கிய அவள் கோணச் சிரிப்புக்கு வேறென்ன பொருள்? 'இனி நீ தப்ப முடியாது’ எனும் கொக்கரிப்புத்தானே அது?
நம்மைவிட உண்மையைக் கண்டவர்கள் இவர்கள் தானோ?
உண்மையும் இதுதானோ?
அன்று நேர்ந்தது நேர்ந்தபோது, அதன் விளைவு இப்படி என்று அப்போது எனக்கு எப்படித் தெரியும்? நானே இவளை இவளாகவே நினைக்கவில்லை. நானும் நானாயில்லை. இருளில் திடீரென மூக்குத்தி சுடர் விட்டதும் அரைத் தூக்கத்தின் அரைமயக்கத்தில் ஏற்பட்டது, ஏதோ தியானத்தின் தரிசனம் என்ற நினைவின் போதையினின்று இன்னும் முற்றிலும் என்னால் மீள முடியவில்லை.
நான் ஏமாந்து போனேன்.
ஆம், இதுவே என் வேதனை.
ஏமாந்து போக என்றுமே பழக முடியாது.
ஒருத்தி ஏமாற்றி; ஒருவன் ஏமாந்து, அல்ல ஒருவள் ஏமாற்றி
ஒருத்தி ஏமாந்து, நிச்சயமாய் இருவரும் ஏமாந்து ஏமாந்து—
உலகம் இயங்குவதே இப்படித்தான் என்பதை நினைத்துப் பார்க்கையில்
உலகம் சமாதானம் அடைந்துவிடுகிறது. ஆனால் மனம் அமைதியடைய மறுக்கின்றது.