பக்கம்:அவள்.pdf/496

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

452லா. ச. ராமாமிருதம்



"எல்லாம் நல்லதுக்குத்தான்னு வெச்சுக்கக்கூடாதா? உன்னுள்ளெயே இப்போ ஒரு உலகம் வளந்துண்டிருக்கு '

புன்முறுவல் பூத்தாள்.

'தவிர ஒவ்வொரு நமஸ்காரத்திலும் வணங்கறவாளுக்கு வணங்கப்பட்டவாளுடைய பலத்தில் ஒரு பங்கு போய்ச் சேர்ந்துடறது, தெரியுமோன்னோ?"

அவள் முறுவல் மாறவில்லை. “உங்களுக்கு இன்னும் தனியாய்ப் பலம் வேணுமா? தாங்கறத்துக்கு தாங்கள் இருக்கோமே போதல்லையா?”

'மலை மாதிரி, இந்தச் சரீரத்தையா? நீங்களா? தனியாவா? ? ?”

'அத்தை நீங்கள் மலையில்லை; எங்கள் குடை'

'டேயப்பா! உன்னை ஜெயிக்கவே முடியாது!"

"அப்படியானால், அதுவே உங்கள் ஆசீர்வாதமா யிருக்கட்டும்’னு உடனே விழுந்து நமஸ்கரித்தாள். ஒண்ணு- ரெண்டு- மூனு- நாலு- அஞ்சு, அவள் மூர்க்கம் எனக்கு நிஜமாவே உடம்பு ஒஞ்சுவர மாதிரி ஆயிடுத்து.

சின்னச் சின்ன விஷயம்.

உண்மையில் சின்னதுதானா?

வேடன் சுட்ட வெடியில் கலைஞ்சுபோன பக்ஷிக் கூட்டம் மாதிரி ஏதேதோ அர்த்தங்கள், அற்புதங்கள், வார்த்தையில் மாட்டிண்டு, கேட்டவாளுக்கும் சொன்னவாளுக்கும்கூட, முழுக்கப் புரியாத தினுசில் இறக்கை யடிச்சுண்டு தவிக்கறதுகள். முழுக்க அடையாளம் கண்டு கொள்றதுக்குள்ளே நாக்கில் கரைஞ்சு போயிட்ட தித்திப்பு மாதிரி இந்த நிலை, அனுபவிக்கிறதுக்கு ஆகாசத்தில் மிதக்கிற மாதிரியிருக்கு.

'டேயப்பா!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/496&oldid=1497676" இலிருந்து மீள்விக்கப்பட்டது