பக்கம்:அவள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சொர்க்க வாசல்

ன்று ஜனனி வருகிறாள். ஹோசூரிலிருந்து வந்து கொண்டேயிருக்கிறாள். இதோ வந்துவிடுவாள். வந்து விட்டாள். வாசலில் ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்கிறது. அதற்குமேல் என்னால் தாங்க முடியவில்லை. வாசலுக்கு விரைகிறேன். கண்ணனும் ஷோபாவும் இறங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

"பாப்பூ யாரு வரா பாரு!"

குழந்தையின் கண்களில் ஒருகணம் திகைப்பு. உடனேயே அடையாளம் வந்துவிட்டது. "க்றீச்!" என்று கொக்கரித்த வண்ணம் என்னிடம் பாய்கிறாள். அந்த வேகம் என்னால் தாங்க முடியவில்லை. விழுந்து விடுவேனோ? இல்லை, சமாளித்துக்கொண்டு விட்டேன்.

"செல்லக்குட்டித் தாத்தா!" கன்னத்துடன் கன்னம் வைத்துக்கொள்கிறாள், என் கன்னங்களைத் தன் கைகளில் பற்றி இழுத்து முத்தமிடுகிறாள். எலும்பு உருகுகிறது.

"குத்துது தாத்தா!"

என் வாழ்க்கையின் வட்டக்கோடின் ஆரம்பப் புள்ளியைப் பேத்தி வழி மீண்டும் தொட்டுவிட்டேன் எனத் தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/5&oldid=1495828" இலிருந்து மீள்விக்கப்பட்டது