நாளை--
நாளை என் வேளை. நான் வெளிப் புறப்பட்டு விடுவேன்.
வேளை கூடின சமயத்தில் எங்கு என் தாயோ-அது அவள் வீடோ, அத்தை வீடோ, எதிர் வீடோ, கிணற் றடியோ, நடுத்தெருவோ, அது என் கவலையில்லை; அந்த சமயத்தில் அது அவள் இஷ்டத்திலுமில்லை. வேளை கூடினதும் வெளிப் புறப்பட்டுவிடுவேன். மழையும் மகப்பேறும் மஹாதேவனுக்கே தெரியாது.
நேற்றாம், இன்றையாம், நாளையாம்! கர்ப்பத்தில் சிரிக்கிறேன். சிரிக்காமல் என்ன செய்வது? நான் சிரித்தால் வெளியிலிருப்பவர், "பார், பார், குழந்தை புரள்றது தெரியறது பார்!’ என்று அவர்கள் மூக்கின்மேல் விரல் வைப்பது அவர்கள் குரலில் தெரிகின்றது. இங்கே இப்போ சிரிக்கிறேன். ஆனால் நாளை அழுதுகொண்டே தான் வெளிவரப் போகிறேன். இதை நினைக்க, இன்னும் அதிகமாக சிரிப்பு வருகிறது.
இருளின் மகவு ஒளி.
புற்றினுள் பாம்பு.
எந்தையும் தாயும் நெஞ்சு நெகிழ்ந்து, ஒன்று கலந்து தம்மை மறந்த தருணம் கருவில் தங்கியதிலிருந்து நான் அமர்ந்த தவத்தில் பொருளாகும் பதத்திற்கு இட்ட மறு பெயர் காலம். தவத்தின் இருக்கை கலையும் சமயங்கள் இறப்பு, பிறப்பு; இரண்டுக்கும் இடையே இரவும் இரவியும் வகுத்த நேற்று, இன்று, நாளை. காலம் என்பதே இவ்வளவுதானே!