பக்கம்:அவள்.pdf/504

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

480லா. ச. ராமாமிருதம்



ஆயினும், இதுதான் என் வியப்பு: கருவின் இருளில் தேறும் இத்தெளிவு, நாளை ஏன், நான் ஒளியில் வெளி வருகையில் மறைந்துவிடுகின்றது?

அதற்கும் பதில் இவ்விருள் தான் அருள வேண்டும். இருளில் இல்லாத பதில் இல்லவே இல்லை.

வியப்பின் அடித்தடம் சந்தேகம்.

ஒவ்வொரு வியப்பும் ஒரு பிறவி. ஒவ்வொரு பிறவியும் சந்தேகத்தின் பரீக்ஷை ; தேக வழி சந்தேகத்தின் தெளிவு.

இந்தத் தெளிவு வரும், வரும், என நம்பி, எப்போது வரும் எனக் காத்திருக்கும் வேளை நாளை நாளையென எத்தனை பிறவிகள்! அத்தனைகளினூடே தருணத்தின் எத்தனை மகத்தான தவம்:

உடலே பீடம்: செயலே தவம்.

கருவின் நிழலில், தருணப் பொறிமேல் விழும் பிறவியின் வரிகளாய் இவ்வளவும் காண்கிறேன். ஆயினும் உதரத்தின் இருளினின்று, நான் ஒளியில் வந்து விழுந்த தருணமே, என்மேல் என் முற்பிறவி, இப்பிறவி, பிற்பிறவி, மற்பிறவிகள், தாமே உரித்த சட்டைகளாய் விட்டுச்சென்ற சந்தேகங்கள் கவிகையில், திக்கு மருண்டு, கர்ப்பத்தின் இருளுக்கே மீள அழுகின்றேன்.

ஆனால் மீள முடியாது. என் தாயும் நான் உரித்த சட்டை தான்.

ஆனால் இங்கேயும் தங்கிவிட முடியாது.

இப்பவே இட நெருக்கடி. நான் வெளிவரும் வேளை ஒரு கணங்கூட தாண்டாது.

என்னை வாங்கிக்கொள்ள உலகம் காத்திருக்கின்றது.

ஆனால் உலகமும் ஒரு கர்ப்பம்தான். அதுவும் முடிந்த வரைதான் தாங்கும். அடுத்தாற்போல் தோள் கொடுக்க சாவு காத்திருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/504&oldid=1497667" இலிருந்து மீள்விக்கப்பட்டது