இன்று நேற்று நாளை 461
எங்குமே தருணம் தங்க முடியாது. தங்க இடம் தேடி, தருணம் தவிக்கும் வியப்பேதான் தவமோ?
மறுபடியும் கேள்வி, மறுபடியும் சந்தேகம், மறுபடியும் பிறவி, ஓயாத தவம். என் தலத்தின் தூய்மைக்கு நான் உரித்த சட்டைகளே சாக்ஷி.
என் சட்டைகள் என் தாய்கள்.
அம்மா!
உன்னை அழைக்கும்போதே உருக்கம் தாளாது பிண்டம் புரள்கிறேன்.
அம்மா! உனக்கு என் முதல் அஞ்சலி,
உன் உயிருடன் என் உயிரையும் சுமக்கின்றாய். என் சுமைகீழ் உன்னால் நிற்கவும் முடியவில்லை, உட்காரவும் முடியவில்லை. நிலை கொள்ளவில்லை. ஒரு மாதமாகவே நீ துயிலிழந்தாய், உன்னால் நான் வளர்கிறேன் எனும் உன் ஆசையே நீ என் இமையில் தீட்டிய மையாகி, அது காட்டும் சித்திரம்தான் நான் நாளை விழிக்கப் போகும் உலகம்
என்னை எனக்குத் தந்ததல்லாமல் நான் வாழ என் உலகையும் எனக்குத் தந்தாய். என்னை உண்டாக்கியதிலிருந்து என்னைச் சுமந்து சுமந்து, நாளை வரை உன் நெற்றியில் கொப்புளித்திருக்கும் வேர்வையின் ஒவ்வொரு துளிக்கும் நான் ஒரு பிறவியெடுத்து, அதற்குள் உன் பிறவி எங்கேயோ அங்கு உன்னை அறிந்து வந்து உனக்கு உழைத்தாலும் உனக்கு நான் பட்ட கடன் கழியாது. தருணத்தின் தவமே, 'நேற்று', 'இன்று', 'நாளை' என்று என்றும் ஓயாத கடனைத் தீர்ப்பதுதானே!