8 லா. ச. ராமாமிருதம்
ஆனால் அம்மா எதையும் வெளிக் காண்பித்துக் கொள்ள மாட்டாள்.
அது அவள் சுபாவம்.
தீபாவளி சமயத்தில் தலையில் ஒரு கை எண்ணெய் வைப்பாள்.
விளையாட்டிலோ, மேலே ஏறிக் கீழே விழுந்து அடிபட்டுக்கொண்டு வந்தால், காயம் பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெய் தடவுவாள்.
இதபோன்ற அத்யாவசியங்களுக்கன்றி, அம்மாவுக்குப் பிள்ளைகளையோ பேரக் குழந்தைகளையோ தொட்டு உறவாடும் பழக்கம் இல்லை.
ஒருசமயம் பேச்சுவாக்கில்: “இந்த நாள் எதற்கெடுத்தாலும் ருஜு கேட்கிறது. தன்னம்பிக்கையில்லாத நாள். யாருக்கு எதை ருஜுப்படுத்தியாகணும்? என்னை உனக்கா? உன்னையே உனக்கா? நேர்மையில்லாத நாள்!"
ஏன் அப்படிச் சொன்னாள்? அப்போது புரியவில்லை. ஆனால் அவள் குமுறல் மட்டும் தெரிந்தது, முகத்தில் குழுமிவிட்ட குங்குமத்தில் குரலில் தெறித்த அளவில்.
ஏன், ஏன்?
இப்போ புரிகிறது.
கொஞ்சம், கொஞ்சம்.
இப்படித்தான், சூத்திரம்போல் எதையேனும் சொல்லிவிட்டுச் சும்மாவாகிவிடுவாள். கேட்டாலும் சொல்லமாட்டாள். "என்னவோ அப்போ தோணித்து, சொன்னேன், போயேன்!"
***
நண்பர்களுடனோ, ஆபீஸ் அலுவலிலோ வேறு எக்காரணமோ, என் வழக்கநேரம் மீறி நான் வீடு திரும்ப