தாயம் 477
***
அப்புறம் இந்த ஸ்ரீதர் பண்ணின துரோகத்தை...
பெற்ற ஒரு பிள்ளையும் சம்பாதிக்கறேன்டா ராஜான்னு வாயில்கூட சரியா பேர் நுழையாத வெளி நாட்டுச் சீமைக்குப் போயிட்டான்னா, எனக்கு இருக்கற ஒரு பிடிப்பும் போயிடுத்து. போய் வருஷம், அஞ்சாறது. மாசம் ஒரு கடிதாசு என்னவோ வரது-என் பேருக்குத் தான் வரது, அவரும் என்ன எழுதினான்னு கேக்கல்லெ. அவர் கேக்கல்லே நானும் காண்பிக்கல்லே. அங்கேதான் என்னவோ ஒரு வரட்டு கெளரவம் தடுக்கறது. அவர்தான் கேட்டால் என்ன? அவருக்கு ஆபீஸ் அட்ரெஸ்ஸுக்கு தனியாப் போடறானோ என்னவோ? அப்படி ஒன்றிரண்டு அவர் என் டேபிள்மேல் வெச்சுட்டுப் போயிருக்கார். என்னிடம் அந்த பரஸ்பரம் இல்லேன்னு தானும் காண்பிக்கறதை நிறுத்திண்டிட்டாரோ என்னவோ? ஆனால் எனக்குத் தெரியும். பிள்ளைக்கும் அப்பாவுக்கும் தான் என்னைக் காட்டிலும் ஒப்புறவு ஜாஸ்தி.
ஆனால் அவருக்கு தனியாக போடுவான்னு தோணல்லே. எனக்கு எழுதறபோதே அப்பா, அம்மாவுக்கு நமஸ்காரம்னு சேர்த்துப் போட்டுடறான். தபால் செலவும் கொஞ்சமாவா இருக்கு ஸ்ரீதர் இதெல்லாம் பாக்கறவன்தான். ஆள் சுபாவத்திலேயே கெட்டி. ஹூம்.
'நீங்கள் சொல்லக்கூடாதா...இவன் இப்படிக் கரை தாண்டிப் போய்த்தான் ஆகணுமா? நமக்கு இருக்கிறது இவனுக்குப் போதாதா?"ன்னு நான் விக்கி விக்கி அழுத போது இவர், "அவனுக்கு வயசாகல்லியா...நீ இப்போ சொல்றதெல்லாம் ஏற்கெனவே அவனுக்குத் தெரியாதா? நான் தனியா எடுத்துச் சொல்ல மாட்டேன். அவனுக்குத் தோணினதை அவன் செய்யறான். அவன் விதியை அவன் நூற்றுக்கறான். அதுதான் முறை. உனக்கு நான், எனக்கு நீ, மிஞ்சறோமா பாரு...