தாயம் 485
'இல்லை, விளக்கேற்ற நேரமாகிவிட்டதே!”
ஆம்! இப்போத்தான் எனக்குத் தெரிந்தது. இத்தனை நேரமாகி விட்டதா? விளக்கை ஏற்றிக்கொண்டு வந்தேன்.
'தாயக்கட்டானின் நடு மலையில் வை.'
சொன்னபடி.
எழுந்து நின்றார். திடீர்னு என்ன உயரம்?
"உமா, இந்த வீடு-வாசல்-இதில் அடங்கிய சகல சொத்துக்கள் மேலும் என் சுய சம்பாதனையில் வாங்கிப் போட்டிருக்கும் நிலபுலன், என் பாங்க் பாஸ்புக், எல்லாமே உனக்குச் சொந்தம்... என்றுமே இவை உன்னுடையவைதான். நம் உறவு சகஜமாக இருந்தால் நம் முடையீது என்கிற முறையில் இருந்திருக்கும். ஆனால் இப்போதிலிருந்து எல்லாம் உனக்கு மட்டுமே சொந்தம். இவைமேல் எனக்கு இனி எந்த உரிமையும் இல்லே...' என்பதற்கு அடையாளமாக தன் மழித்த தலையைத் தடவிக்கொண்டார். "இந்த நிமிஷத்திலிருந்து, நான் இன்னும் இங்கு நின்றுகொண்டிருப்பது உன் தயவு, உன்னிடம் கேட்காத அனுமதி...”
'அப்படின்னா? எனக்கு ஒண்ணும் புரியல்லியே?’’ உண்மையிலேயே திகைப்பாயிருந்தது.
உள்ளங்கைகளை விரித்தார்.
“I am going away... பலப்பரீக்ஷை முடிந்தது”
-வார்த்தைகளின் கனம் அந்தக் குரலின் அழுத்தத்தில், என்னுள் அமிழ்கையில், அர்த்தம் தோய்கையில், என் முழங்கால்கள் என் கீழ் இற்றன. காலடியில் பூமி வாய் திறந்தது.
'No No!! No!!!' என்னுள் கற்கள் இடிந்து அகளுடன் நான் சரிந்து அவர் முழங்கால்களைப் கொண்டேன்.