அம்மா 9
நேர்ந்தால் அம்மா வாசலில் உட்கார்ந்திருப்பாள். நானும் உள்ளே போகாமல் பக்கத்தில் உட்கார்ந்துகொள்வேன். உள்ளே ஒரே ரகளையாயிருக்கும்.
பேசமாட்டோம். பேசத் தோன்றவில்லை.
தனிமையே ஒரு அழகிய பூ, விரிந்த பூவின் இதழ்கள் மீண்டும் படுதாயிறங்கும் இருளில் எங்கள்மேல் குவிந்து, அதனுள் நாங்கள் அந்த மோனத்தின் இதவுக்கும் 'மெத்’துக்கும் இனி எங்கே போவேன்?
எதை, யாருக்கு ருஜுப்படுத்தியாகணுமா என்ன அம்மா பாஷையில்?
நாங்கள் இருந்த இந்த நிறைவுநிலை பாஷைக்குக் கிட்டாது. அப்பாற்பட்டது. ஆனால் இப்படியும் ஒரு நிலை உண்டு என்று தெரிகிறது. அலைதாண்டிய அமைதி. ஆனால் கடல்.
அம்மா பெருமூச்செறிகிறாள்.
***
"அம்மா, கடவுள் இருக்கிறார் என்பதில் உனக்கு நம்பிக்கையிருக்கிறதா?”
அம்மா பிரம்பு நாற்காலியில் சாய்ந்தபடி, மேலுதட்டின் மேல் வலது சுட்டுவிரலையும் நடுவிரலையும் வைத்த படி எங்கோ யோசனையிலிருந்து மீண்டாள். "ஊங்?"
"கடவுள்மேல் உனக்கு நம்பிக்கையிருக்கா?”
கையை விரித்துக் குறுஞ்சிரிப்புச் சிரித்தாள். நீண்ட நேரத்துக்குப் பிறகு, திருடனுக்கும் கன்னக் கோல் சார்த்த ஒரு மூலை வேணுமில்லையா?”
நான்தான் ஏற்கனவே சொல்லிவிட்டேன், அம்மா புதிர் மாஸ்டர்.