பக்கம்:அவள்.pdf/530

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

486 லா. ச. ராமாமிருதம்



'எனக்கு நீங்க வேணும்! நீங்கள் வேணும்!! நீங்கள் தான் வேணும்!!!'

--அடிவயிற்றிலிருந்து இந்தக் கதறல், மடையுடைந்த இந்தக் கண்ணீர்ப் பெருக்கு, அதில் என் குளிப்பு... தினம் என்னளவாய் இத்தனை நாட்களாகக் கல்லாய்க் கனத்துவிட்ட என் இதய பாரம் இந்தக் கண்ணீர் ஸ்னானத்தில் அதன் கரையல் அம்மாடி--இதுவரை எதற்கேனும் அழுததாகவே எனக்கு நினைவில்லே... எல்லாமே புதுமை. அழுகை இத்தனை மகத்தான அனுபவமா?

கன்னத்தில் கண்ணீர் புரண்ட வண்ணம் அவரை அண்ணாந்து நோக்கினேன்.

பனிப்படலத்தில் தெளிவு மங்கிய மலைச்சாரல்போல் ஏதோ வகையில் முடிவற்றவனாய் பயமாயிருந்தான். ஆனால் நான் மலையின் அடிவாரத்தில் இருந்தேன். அதுவேதான் என் தைரியம்! என் உண்மை இவரன்றி வேறு எது?

குத்துவிளக்கின் வெளிச்சத்தில்--

தாயக்கட்டைகள் விழுந்திருந்த நிலையில்,

தாயம்--

கண் சிமிட்டிற்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/530&oldid=1497563" இலிருந்து மீள்விக்கப்பட்டது