பக்கம்:அவள்.pdf/538

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

494 லா. ச. ராமாமிருதம்



என்னாலேயே தடுக்க முடியாதே. நான் என்ன செய்வேன்? நான்தான் அப்பவே சொல்லிவிட்டேனே, என் நெஞ்சிலிருக்கிறதை அப்படியே கொட்டிவிடுவேன் என்று!

எனக்கு மாத்திரம் தெரியாதா, நீங்கள் நெஞ்சில் முள் மாட்டிண்ட மாதிரி, கண்டத்தை முழுங்கிண்டு, முகம் நெருப்பாய்க் காய, வாசலுக்கும் உள்ளுக்குமா அலைஞ்சது? அப்போ உங்களுக்கு மாத்திரம் என்னோடு பேச ஆசையில்லை என்று தான் சொல்ல முடியுமா? அதை நினைத்தால்தான் எனக்குத் துக்கம் இப்போகூட நெஞ்சை அடைக்கிறது. என்ன பேச வேண்டும் என்று நினைத்தீர்களோ? அதைக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லை. இதற்கு முன்னால் நீங்கள் யாரோ, நான் யாரோ? பரதேசிக் கோலத்தில் படி தாண்டி உள்வந்து நீங்கள் என் கை பிடித்ததும் ஜன்மேதி ஜன்மங்கள் காத்திருந்த காரியம் நிறைவேறிவிட்டாற்போல் எனக்குத் தோன்றுவானேன்?

அப்படிக் காத்திருந்த பொருள் கைக்கூடிய பின்னரும், இன்னமும் காத்திருக்கும் பொருளாலே இருப்பானேன்? இன்னமும் ஜன்மங்களின் காரியம் நிறைவேறவில்லையா? இப்பொழுது நெருப்பு என்றால் வாய் வெந்துபோய் விடாது. தாலி கட்டின வீட்டில் அடித்து விழுகிறாயே என்று கேட்காதேயுங்கள். இப்போ நான் சொல்லப் போவதைத் தைரியமாகத்தான் சொல்லவேணும். நீங்கள் எங்கேயோ 'காம்ப்' என்று தூரதேசம் போய் விட்டீர்கள். இந்த நிமிஷம் எந்த ஊரில், எந்த ஹோட்டலில், சத்திரத்தில், எந்தக் கூரையை அண்ணாந்து பார்த்தபடி என்ன யோசனை பண்ணுகிறீர்களோ? நானும் புழுங்கிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் திரும்பி வருவதற்குள் எனக்கு எதுவும் நேராது என்று என்ன நிச்சயம்? நினைக்கக்கூட நெஞ்சு கூசினாலும், நினைக்கதான் செய்கிறது. உங்களைப் பற்றியும் அப்படித்தானே? அந்தந்த நாள் ஒரு ஒரு ஆயுசு என்று கழியும் இந்த நாளில், நாமிருவரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/538&oldid=1497382" இலிருந்து மீள்விக்கப்பட்டது