10 லா. ச. ராமாமிருதம்
ஆனால் அவளைக் குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை. எந்தப் பேருண்மைக்கும் 'பளிச்'சான வெளிச்சம் கிடையாது.
ஒளியுள் நிழலாய்
நிழலுள் ஒளியாய்
ஒளியும் நிழலுமாய்
ஒளியில் நிழலில்
ஒளிந்து கொண்டு
களவு காட்டும்
மாய நிர்வாணம்
இல்லை
நிர்வாண மாயம்.
சத்யமாயை என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார்.
தான் அறிந்தோ அறியாமலோ இந்தக் களவு காட்டும் பாஷையால் அம்மாவும் இதற்கு உடந்தை.
***
பத்து நாட்களுக்குமுன் ஓரிரவு, தூக்கமிலாது, புரண்டு கொண்டிருக்கையில், எண்ணங்களின் கடையலில் 'தொப்புள்கொடி’ என்று ஒரு சொற்றொடர் தோன்றிற்று.
(மனம் எப்போத்தான் சும்மாயிருக்கிறது, சும்மா விட்டது?)
ஆம், கொடியை அறுத்துவிட்டாலும், அதுவாய் அறுந்தாலும் அல்ல இற்று விழுந்தாலும் கொடி உறவின் பிணைப்பு விட்டுப் போவதில்லை.
போவதேயில்லை.
அகிலத்தையே அப்படி ஒரு தொப்புள் கொடி சுற்றிக் கொண்டிருக்கிறது. அதன் மறுபெயர் அம்மா.