498 லா. ச. ராமாமிருதம்
முடியாது. நாங்கள் 5 1/2மணிக்கு எழுந்தால் அவர் ஐந்து மணிக்கு எழுந்து அடுப்பை மூட்டியிருப்பார். ஐந்து மணிக்கு எழுந்தால் அவர் 4 1/2மணிக்கு எழுந்து காப்பியைக் கலந்துகொண்டிருப்பார். நாலரை மணிக்கு எழுந்தால் அவர் 4 மணிக்கு; இந்தப் போட்டிக்கு யார் என்ன பண்ணை முடியும்?
"வாங்கோ, வாங்கோ; காப்பியைக் குடிச்சிட்டுப் போயிடுங்கோ, ஆறி அவலாய்ப்போய் அதை மறுபடியும் சுட வைக்காதபடிக்கு; அதுவே நீங்கள் பண்ற உபகாரம். நான்தான் சொல்றேனே; நான் ஒண்டியாயிருந்தப்போ எல்லாத்தையும் நானேதானே செஞ்சாகணும்; செஞ்சிண்டிருந்தேன். இப்போ என்னடான்னா கூட்டம் பெருத்துப் போச்சு: வேலையை ஏலம் போட்டாறது. ஊம். ஊம்...... நடக்கட்டும்...நடக்கட்டும் எல்லாம் நடக்கிற வரையில் தானே? நானும் ஒருநாள் ஒஞ்சு நடு ரேழியில் காலை நீட்டிட்டேன்னா, அப்போ நீங்கள் செஞ்சுதானே ஆகணும்? நீங்கள் செஞ்சத்தை நான் ஏத்துண்டுதானே ஆகனும்? மடியோ விழுப்போ ஆசாரமோ அநாசாரமோ-'
அம்மா அவர் காரியத்தைப்பற்றிச் சொல்லிக்கட்டும். எல்லாமே அவரே செஞ்சுண்டாத்தான் அவருக்குப் பாந்தமாயிருக்கிறது. எங்களைப் பெற்றவர்களும் ஏதோ தங்களுக்குத் தெரிஞ்சதை எங்களுக்குச் சொல்லிதான் வைத்திருக்கிறார்கள். எங்களுக்குத் தெரிஞ்சதை, எங்களால் முடிஞ்சவரை நன்றாய்த்தான் செய்வோம். ஆனால் அவர் ஆசாரத்தைப் பற்றிப் பெருமைபட்டுக் கொள்வதில் கடுகளவு நியாயம்கூடக் கிடையாது. ஜலம குடிக்கும்போது ஒரு வேளையாவது பல்லில் டம்ளர் இடிக்காத நாள் கிடையாது; இதை யாராவது சொன்னால்—இதற்கென்று கொஞ்சம் தைரியமாய் மூத்த ஒரகத்திதான் கேட்கமுடியும்—ஒப்புக்கொள்ள மாட்டார்.