பாற்கடல் 503
பெண் இருந்தாள். முகம் உடல்வாகு எல்லாம் உன் அச்சு தான். இப்போ இருந்தால் உன் வயசுதான் இருப்பாள், என் நெஞ்சை அறிஞ்சவள் அவள் தான். மூணு நாள் ஜுரம், முதல் நாள் மூடிய கண்ணை அப்புறம் திறக்கவேயில்லை. மூளையில் கபம் தங்கிவிட்டதாம். இப்பொத்தான் காலத்திற்கேற்ப வியாதிகள் எல்லாம் புதுப்புது தினுசாய் வரதே! பின்னால் வந்த விபத்தில் அவளை மற்ந்து விட்டேன் என்று நினைத்தேன். ஆனால் இப்போத்தான் தெரியறது உண்மையில் எதுவுமே மறப்பதில்லை. எதுவுமே மறப்பதற்கில்லை. நல்லதோ கெடுதலோ அது அது, சாப்பாட்டின் சத்து ரத்தத்துடன் கலந்துவிடுவது போல், உடலிலேயே கலந்துவிடுகிறது. நாம் மறந்து விட்டோம் என்று மனப்பால் குடிக்கையில், அடி முட்டாளே! இதோ இருக்கிறேன், பார்!’ என்று தலை தூக்கிக் காண்பிக்கிறது. உண்மையில் அதுவே போகப் போக நம்மைத் தாக்கும் மனோசக்தியாய்க்கூட மாறி விடுகிறது. இல்லாவிட்டால் என் மாமியாரும் நானும், எங்களுக்கு நேர்ந்ததெல்லாம் நேர்ந்தபின் இன்னும் ஏன் இந்த உலகத்திலே நீடிச்சு இருந்திண்டிருக்கணும்?'
இதைச் சொல்லிவிட்டு அம்மா அப்புறம் பேசவில்லை. தன்னை அமுக்கிய ஒரு பெரும் பாரத்தை உதறித் தள்ளினாற் போல் ஒரு பெருமூச்செறிந்தார்; அவ்வளவுதான். என் பாதங்களில் மருதாணி இடுவதில் முனைந்தார். ஆனால் அவர் எனக்கு இடவில்லை. என் உருவத்தில் அவர் கண்ட தன் இறந்த பெண்ணின் பாவனைக்கும் இடவில்லை; எங்கள் இருவரையும் தாண்டி எங்களுக்குப் பொதுவாய் இருந்த இளமைக்கு மருதாணியிட்டு வழிபட்டுக்கொண்டிருந்தார். இந்த சமயத்துக்கு அந்த இளமையின் சின்னமாய்த்தான் அவருக்கு நான் விளங்கி னேன்; எனக்கு அப்படித்தான் தோன்றிற்று. இப்படியெல்லாம் நினைக்கவும் எனக்குப் பிடிக்கும். அதனால்தான் எனக்கு அப்படித் தோன்றிற்றோ என்னவோ?