பாற்கடல் 511
அம்மா ஒன்றும் பதில் பேசவில்லை. குழந்தையைக் கீழேயிறக்கிவிட்டு நேரே போய் மருமகளை வாரியணைத்துக் கொண்டார்.
மன்னி பொட்டென உடைந்து போனாள். அம்மாவின் அகன்ற இடுப்பைக் கட்டிக்கொண்டு குழந்தைக்கு மேல் விக்கி அழுதாள். அம்மா கண்கள் பெருகின. மருமகளின் கூந்தலை முடித்து நெற்றியில் கலைந்த மயிரைச் சரியாய் ஒதுக்கிவிட்டார்.
'காந்தி, இதோ பார், இதோ பாரம்மா-'
சேகர் ஒரு ஊசி மத்தாப்பை அம்மாவுக்கும் பாட்டிக்கும் முகத்துக்கு நேர் பிடித்துச் சிரித்துக்கொண்டிருந்தான். அவன் கன்னத்தில் கண்ணிர் இன்னும் காயவில்லை.
எங்களில் ஒருவர் விலக்கில்லாமல் எல்லோருக்கும் கண்கள் நனைந்திருந்தன.
குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்துதான் லக்ஷ்மி ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் எனக்கு நீங்கள் கிட்டினர்கள். ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அமிருதமும் அதிலேயே தான்....