பக்கம்:அவள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவள் 19


ஒரு சமயம் அண்ணா சிராத்தத்தன்று:

"ஆமா, நீயும் இருவத்தி ஆறு வருஷமாப் பண்ணிண்டிருக்கே. நீ இறைக்கிற எள்ளும் தண்ணிக்கும்தான் இன்னும் அண்ணா காத்திண்டிருக்காராக்கும்! எங்கானும் இன்னொரு ஜன்மா எடுத்திருப்பார். ஆனால் நமக்கு முன்னாலிருந்தவா பண்ணிண்டிருந்திருக்கா. நீயும் பண்ணுன்னு காண்பிச்சுட்டுப் போயிருக்கா. அதனால பண்ணறோம். இதைத் தவிர நமக்கென்ன தெரியும்? நமக்கு ஒரு வருஷம் பிதுர்க்களுக்கு, தேவர்களுக்கு ஒரு நாள்னு வாதம் வேறு இருக்கு."

அம்மா என்ன சொல்கிறாள்? திவசம் பண்ணு என்கிறாளா? வேண்டாம் என்கிறாளா? இல்லை, முன் சுவடுகளைப் பற்று என்கிறாளா?

"ஒண்ணு தெரியுமா, ராமாமிருதம்: பற்றவைக்க நெருப்புக்குச்சி ஒண்னு போதும்." இதென்ன திடீர் என்று, சம்பந்தா சம்பந்தமில்லாமல்? இல்லை சம்பந்தமிருக்கிறதா? இறப்பு ஒன்றுதான் திண்ணம், மற்றவையெல்லாம் யூகமும் தர்க்கமும் என்கிறாளா? அவள் சொல்வில் சூசகம் ஏதோ ஒளிந்து கொண்டிருக்கிறது.

இன்னொரு சமயம் - ஓ, அம்மாவுக்கும் எனக்குமிடையே நிறைய சமயங்கள் உண்டு. "அம்மா கடவுள் இருக்கிறார் என்பதில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?” அம்மா, பிரம்பு நாற்காலியில் சாய்ந்தபடி மேல் உதட்டின் மேல் வலது சுட்டு விரலையும் நடுவிரலையும் வைத்தபடி எங்கோ யோசனையிலிருந்து மீண்டவளாய், ...ஊங்...?’’

"கடவுள் மேல் உனக்கு நம்பிக்கை உண்டா?”

கையை விரித்துப் புன்னகை புரிந்தாள்.

சற்று நேரத்துக்குப்பின் 'திருடனுக்கும் கன்னக் கோல் சார்த்த ஒரு மூலை வேணுமில்லையா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/63&oldid=1496245" இலிருந்து மீள்விக்கப்பட்டது