பக்கம்:அவள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 லா. ச. ராமாமிருதம்

பாட்டனார், பாட்டி.

கொள்ளுத் தாத்தா, கொள்ளுப்பாட்டி.

கொள்ளுப்பாட்டியிடம் அம்பாள் பிரத்யகூமானதாக அந்த நாள் லால்குடிக்கே பிரசித்தம்.

நான் அவளைப் பார்த்ததில்லே. பார்த்திருக்க முடியாது. ஆனால் கொள்ளுத் தாத்தாவையும் பெந்துப் பாட்டியையும் அடையாளம் கண்டு கொள்கிறேன்.

எப்படியென்று தெரியவில்லை. ஆனால் அது எனக்கு ஆச்சர்யமாயில்லை.

அம்மாவைப் பெற்ற பாட்டி, அவள் ஒரு ஸ்ரீமதி. இவளையும் எனக்குத் தெரிய வழியில்லை. ஏனெனில் அவள் இறந்த பின்தான் அம்மாவுக்குத் திருமணம். என்ன சிவப்பாயிருக்கிறாள்! இன்னும் யார் யாரோ வந்து கொண்டிருக்கிறார்கள். தெரிந்தவர், தெரியாதவர். ஆனால் எல்லாரும் தெரிந்தவரே. கர்ப்பக்ருஹம் கலியாணக் கூடமாகி எல்லாரும் நடமாடுகிறார்கள். ஆனால் பேச்சு இல்லை.

ஒரு எலி அகண்ட விளக்கிலிருந்து அம்பாள் தோள் மேல் தாவிக் குதித்து, மேல் ஏறித் தலையை அடைந்து, கிரீடத்திலிருந்து பிரபைக்குத் தாவி ஓடுகிறது. இதுவும் எனக்கு ஆச்சாியமாயில்லே, அதிா்ச்சியாயில்லை. நியதியுடன் இதுவும் இழைந்துதான் இருக்கிறது.

எல்லோரும் என் குழந்தைகள்.

அவள் சொல்லவில்லை.

ஆனால் தெரிகிறது.

உலகம் பூரா ஒரே தொப்புள் குடி,

சட்டெனக் காட்சி மறைந்தது.

பையன்கள் திரும்பிவரும் பைக் சத்தம் கேட்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/68&oldid=1496265" இலிருந்து மீள்விக்கப்பட்டது