பக்கம்:அவள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vii

முற்பட்டு அகிலமெங்கும் பரவி இயங்கிக்கொண்டு அவள், தன் பங்குக்குப் பிறவியுடன் கொணர்ந்திருக்கும் மூலாதார சக்தியின் அசத்ய நாடி அது. இன்னும் யோசித்தால் இப்போது அவளே அதுதான்.

இனிமேல்தான் நம் மாசுகள், அழுக்குகள் படிந்து, பிசுக்கேற வேண்டும். அதற்குமுன்னரே ஜனனி உன் துல்லியத்தில் உன் தரிசனம் கிட்டுகிறதே, நான் பாக்யவான்.

எங்கள் வாசல் பிள்ளையார் சக்தி வாய்ந்தவர். அவர் உண்டிக்கு அவ்வப்போது போடும் காசுக்கு அவர் நிறைவேற்றும் கோரிக்கைகள் மிகப் பெரியன. நிச்சயமாய் அவர் ஹைமவதியின் பேச்சுக்குக் கூடவே செவி சாய்க்கிறார் என்றே எங்கள் அபிப்பிராயம். 'எனக்கு இதில் நம்பிக்கையில்லை, அதில் நம்பிக்கையில்லை' என்று எங்களுள் பீற்றிக் கொள்பவர்கூட, தமக்காக அவளை வேண்டிக்கச் சொல்லி தம் காரியங்களைச் சாதித்துக் கொள்வதுமுண்டு. உறவின் பிசுக்குக்கு எங்கள் பிள்ளையார் அப்பாற்பட்டவரல்ல; அவளுக்கு அவர் தாக்ஷண்யப்படக் காரணமிருக்கிறது.

பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன் ஒருநாள் மதியம் நான் பழைய காயிதங்களின் வழி என் பழைய நினைவுகளைப் புரட்டிக்கொண்டு அவைகளில் ஊன்றியிருக்கையில்:

"லாசப்பா, லாசப்பா! இதைப் பாருங்களேன்! பாருங்களேன்!!"

கத்திக்கொண்டே கிணற்றடியிலிருந்து ஒடி வந்தாள். அவளுக்கு உடல் பதறிற்று. கண்கள் ஒளி வீசின. குழந்தை முகமாகிவிட்டாள். ஏந்திய கைகள் நடுங்கின. அவைகளுள் ஒரு குட்டிப் பிள்ளையார் விக்ரஹம், அவள் பரபரப்பு என்னையும் தொற்றிக்கொண்டது.

"எங்கே கிடைச்சுது?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/7&oldid=1495832" இலிருந்து மீள்விக்கப்பட்டது