பக்கம்:அவள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 லா. ச. ராமாமிருதம்

மரணத்திற்குத் தனிப் பயம், அதன்மேல் சீற்றம் எல்லாம் எங்களுக்கு விட்டுப்போச்சு. தினம் அத்துடன் வளைய வருகிறோம். அதுதான் தெரியும். இது உறவு தானே வீட்டுள்ளேயே தகப்பன் மகனுடன் பேசாமல், மகன் தாயோடு பேசாமல், சகோதரர்கள் பேசிக் கொள்ளாமல் குடும்பங்கள் இல்லையா? காரியங்கள் நடக்கவில்லையா அதுபோன்ற உறவு Daeth My Brother, Who wiłł not speak to me, but is waiting to embrace me...

நான் ஒரு வீடு கட்டினேன். நாலு லட்ச ரூபாயில் வட்டிக்கு வாங்கிக் கட்டினேன். பால் காய்ச்சிக் குடித்தாயிற்று. நாளைக்குக் குடிபுக வேண்டும். மறுநாள் மூட்டை முடிச்சுக்களுடன் போய்ச் சேர்ந்தால் வீட்டைக் காணோம். ஒரு சுவர்கூட அடையாளத்துக்கு இல்லை. தரைமட்டம்.

எப்படியிருந்திருக்கும் உங்களுக்கு? என்னால் நினைத்துப் பார்க்க முடியல்லே. அசட்டுக் கேள்வி. மன்னித்து விடுங்கள்.

"அதைத்தான் .சொல்லவருகிறேன். நீங்கள் நினைக்கிற மாதிரியில்லை. புது வீட்டுக்கு அண்டைக்காரன் bomb விழுந்ததில் இறந்துபோனான். மோசம் போயிட்டான். நான் உயிருடன் இருக்கிறேன் அல்லவா! அது நன்றிக்குரிய விஷயம் அல்லவா!-அடுத்து அதே மூச்சில் ஆவேசத்துடன், "அப்பவும் நாங்கள் லா.ச.ரா வைப் படிப்போம்."

அதிர்ந்துபோனேன். என்னை அறியாமல் என் கைகள் கூப்பிக் கொண்டன எனக்குக் குரல் தழுதழுத்தது. "என்னையும் உங்களையும் சேர்த்துச் சொல்லாதீர்கள். நீங்கள் செயல் வீரர்கள். நான் என்மூலையில் உட்கார்ந்து கொண்டு தட்டான் சுத்தியால் எழுத்தைத் தட்டிக் கொண்டு என்னத்தைச் செய்துவிட்டேன்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/76&oldid=1496326" இலிருந்து மீள்விக்கப்பட்டது